பெட்ரோல் செலவை குறைக்க வேண்டுமா? ஒவ்வொரு இந்தியரும் கூகுள் மேப்ஸில் இந்த வசதியை தெரிஞ்சுக்கணும்!
இந்தியாவில் தினமும் பல கோடி மக்கள் கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக முன்பின் தெரியாத இடத்திற்கு துல்லியமாக வழி காட்டுகிறது கூகுள் மேப்ஸ். அதேபோல் இந்த மேப்ஸ் செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது கூகுள் நிறுவனம். எனவே தான் அதிக மக்கள் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்துகின்றனர்
அதேபோல் கூகுள் மேப்ஸில் எரிபொருளைச் சேமிக்க உதவும் ஒரு பயனுள்ள அம்சம் இருப்பதை பலர் அறிந்திருப்பதில்லை. அதாவது பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ள நிலையில், இந்த அம்சம் தினமும் பயணம் செய்பவர்களுக்குச் செலவைக் குறைக்க உதவும்.

கூகுள் மேப்ஸின் எரிபொருள் சிக்கன வழிகள்: கூகுள் மேப்ஸில் உள்ள எரிபொருள் சிக்கன வழிகள் (Fuel-Efficient Routes) அம்சம் ஆனது குறைந்த எரிபொருள் செலவாகும் பாதையைத் தேர்வு செய்து காட்டுகிறது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களில் பயன்படுத்தக் கிடைக்கிறது. பொதுவாக மக்கள் விரைவாக சென்றடையும் வழியைத் தேர்வு செய்வார்கள். ஆனால் இந்த அம்சம், சிறிது கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டாலும், எரிபொருளை மிச்சப்படுத்தும் வழியைப் பரிந்துரைக்கிறது. இதன் மூலம் பயணச் செலவைக் குறைக்க முடியும்.
கூகுள் மேப்ஸ் ஒரு வழித்தடம் எரிபொருள் சிக்கனமானதா என்பதைப் பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகிறது. இதில் சாலையின் போக்குவரத்து நெரிசல், ஏற்றம் மற்றும் இறக்கம், வாகனத்தை அடிக்கடி நிறுத்தி மீண்டும் இயக்க வேண்டிய சூழல், சீரான வேகத்தில் பயணிக்க முடியுமா என்பதும், மொத்த பயண தூரமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த தகவல்களை ஆய்வு செய்து, குறைந்த எரிபொருள் செலவாகும் சிறந்த வழித்தடத்தைக் கூகுள் மேப்ஸ் பரிந்துரைக்கிறது.
கூகுள் மேப்ஸ் வழங்கும் எரிபொருள் சிக்கன வழித்தடங்கள், நீங்கள் பயன்படுத்தும் வாகனத்தின் வகையைப் பொறுத்து மாறுபடும். கூகுளின் கூற்றுப்படி, டீசல் வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் சிறந்த மைலேஜை வழங்குகின்றன. மறுபுறம், நகரப் போக்குவரத்தில் ஹைப்ரிட் மற்றும் மின்சார வாகனங்கள் அதிக எரிசக்தி திறனுடன் செயல்படுகின்றன. நீங்கள் வாகனத்தின் இன்ஜின் வகையைத் தேர்வு செய்யவில்லை என்றால், கூகுள் மேப்ஸ் இயல்பாக பெட்ரோல் வாகனத்தை அடிப்படையாகக் கொண்டு பரிந்துரைகளை வழங்கும். எனவே நீங்கள் பயன்படுத்தும் வாகனத்தின் இன்ஜின் வகையைச் சரியாகத் தேர்ந்தெடுத்தால் துல்லியமான மற்றும் பயனுள்ள வழித்தடங்களைப் பெற உதவும். சரி இதை கூகுள் மேப்ஸில் எப்படி பயன்படுத்து என்பதை இப்போது பார்க்கலாம்.
வழிமுறை-1: முதலில் கூகுள் மேப்ஸில் மேலே உள்ள உங்கள் சுயவிவரப் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.
வழிமுறை-2: அடுத்து Settings (அமைப்புகள்) பகுதிக்கு செல்லவும்.
வழிமுறை-3: அதன்பிறகு Navigation Settings (வழிசெலுத்தல் அமைப்புகள்) என்பதை தேர்வு செய்யவும்.
வழிமுறை-4: இப்போது Route Options (வழி விருப்பங்கள்) எனும் விருப்பம் இருக்கும் அதை கிளிக் செய்து
Prefer Fuel-Efficient Routes (எரிபொருள் சிக்கன வழிகள்) என்ற விருப்பத்தை இயக்கவும்.
வழிமுறை-5: அதன்பின்பு உங்கள் வாகனத்தின் இன்ஜின் வகையை (Petrol, Diesel, Hybrid, Electric) தேர்ந்தெடுக்கலாம்.
இப்போது இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டால், கூகுள் மேப்ஸ் குறைந்த எரிபொருள் செலவாகும் வழிகளை பச்சை இலை சின்னத்துடன் காட்டும்.

இந்த அம்சம் உண்மையில் பணத்தை மிச்சப்படுத்துமா என்பது உங்கள் பயண வழி மற்றும் ஓட்டும் முறையைப் பொறுத்தது. இருப்பினும், கடுமையான போக்குவரத்து நெரிசல், அடிக்கடி பிரேக் போட வேண்டிய சூழல் மற்றும் அதிக எரிபொருள் செலவாகும் பாதைகளைத் தவிர்க்க உதவுவதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என்று கூகுள் தெரிவிக்கிறது. இதனால், தினசரி பயணம் செய்பவர்கள் காலப்போக்கில் எரிபொருள் செலவில் கணிசமான சேமிப்பைப் பெற வாய்ப்புள்ளது.
நீங்கள் தினமும் வேலைக்கு செல்பவராக இருந்தாலோ அல்லது அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செய்பவராக இருந்தாலோ, சிறிதளவு எரிபொருள் சேமிப்பும் காலப்போக்கில் நல்ல பணச் சேமிப்பாக மாறலாம். இருப்பினும், இந்த அம்சம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான பலனை வழங்காது. சில நேரங்களில் பரிந்துரைக்கப்படும் வழி சற்று நீளமாக இருக்கலாம். ஆனால் பல பயனர்கள், தொடர்ந்து பயன்படுத்தியபோது எரிபொருள் சேமிக்க முடிந்ததாகக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications