PF பணம் எடுக்க படாதபாடு.. பேங்க் பாஸ்புக், PAN கார்டு, ஆதார் கார்டு எடுங்க.. உடனே கேஒய்சி அப்டேட் செய்யுங்க!
இந்தியாவில் பணிபுரியும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் முக்கிய நிதி ஆதாரமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) விளங்குகிறது. தடையற்ற பிஎஃப் சேவைகளை பெற, சந்தாதாரர்கள் தங்களது யுஏஎன் (UAN) போர்ட்டலில் கேஒய்சி (KYC) விவரங்களை சரியாக புதுப்பிப்பது கட்டாயமாக இருக்கிறது. இல்லையென்றால், பிஎஃப் (PF) பணம் எடுப்பது படாதபாடாகிவிடும்
ஏனென்றால், இபிஎஃப்ஓ (EPFO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation) ஆனது கேஒய்சி விவரங்கள் பொருந்தவில்லை என்றால், பரிவர்த்தனைகளுக்கு அனுமதி கொடுக்காது. அதாவது, யுஏஎன் (UAN), ஆதார்-பான் (Aadhaar-PAN) மற்றும் பேங்க் பாஸ்புக் ஆகிய விவரங்கள் சரியாக பொருந்த வேண்டும்.

இந்த விவரங்களில் சிறிய தவறு இருந்தாலும், கிளைம்கள் (Claims) நிராகரிக்கப்படலாம் அல்லது செயலாக்கத்தில் உள்ளது (Under Process) என்று நிறுத்தி வைக்கப்படலாம். ஆகவே, கேஒய்சி விவரங்களை அவ்வப்போது, யுஏஎன் போர்ட்டலுக்கு சென்று அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இதில் பெயர், பிறந்த தேதி, பான் ஆதார் லிங்க் உள்ளிட்டவை கவனிக்கப்பட வேண்டியதாகும்.
என்னென்ன சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது?
உங்கள் பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் பிஎஃப் அக்கவுண்ட் விவரங்கள் உள்ள பெயர்களில் எழுத்து மாற்றங்கள் (Spelling differences) இருந்தால் கூட வெரிபிகேஷன் வெற்றிகரமாக முடியாது. பான் கார்டு எண் தவறாக உள்ளிடப்பட்டாலோ அல்லது பிஎஃப் கேஒய்சி (KYC) பிரிவில் சரிபார்க்கப்படாமல் இருந்தாலோ அக்கவுண்ட்கள் இணைக்கப்படாது.
பிஎஃப், பான் மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றில் கொடுத்த பிறந்த தேதி அல்லது பாலினம் ஆகியவற்றில் மாற்றங்கள் அல்லது பிழைகள் இருந்தால் கிளைம்களின்போது வெரிபிகேஷன் செய்ய முடியாது. ஆதார் கார்டு, பான் கார்டுடன் இணைக்கப்படவில்லை என்றால், இபிஎஃப்ஓ அக்கவுண்ட்டை பரிவர்த்தனைகளின்போது பயன்படுத்த முடியாது.
ஆகவே, பணம் எடுப்பது, மாற்றுவது அல்லது செட்டில்மென்ட் செய்வதில் தாமதம் ஏற்படும். கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்த பிறகே பரிவர்த்தனைகளை செய்ய முடியும். ஆதார், பான், பேங்க் அக்கவுண்ட் ஆகியவற்றில் இருக்கும் விவரங்கள் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிறகு, பிஎஃப் கேஒய்சி அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
பிஎஃப் கேஒய்சி (EPF KYC) விவரங்களை புதுப்பிப்பது எப்படி?
படி 1: இபிஎஃப்ஓ யுஏஎன் (EPFO UAN) மெம்பர் போர்ட்டலுக்கு சென்று, யுஏஎன் நம்பர் மற்றும் பாஸ்வேர்டு ஆகிய விவரங்களை (Credentials) பயன்படுத்தி லாகின் செய்யவும்.
படி 2: முகப்பு பக்கத்தில் உள்ள மேனேஜ் (Manage) டேபை கிளிக் செய்து, கேஒய்சி (KYC) ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
படி 3: நீங்கள் சேர்க்க அல்லது புதுப்பிக்க விரும்பும் ஆவண வகையை (Document Type) தேர்ந்தெடுத்து, விவரங்களை மிக கவனமாக உள்ளிடவும்.
படி 4: விவரங்களை சரிபார்த்து, சேமி (Save) பட்டனை கிளிக் செய்யவும். நீங்கள் சமர்ப்பித்த ஆவணம் பெண்டிங் கேஒய்டி (Pending KYC) பிரிவின் கீழ் காண்பிக்கப்படும்.
படி 5: உங்கள் கேஒய்சி கோரிக்கையின் நிலையை (Status) யுஏஎன் போர்ட்டல் மூலம் நேரடியாக பார்த்து கொள்ளலாம். இது நிலுவையில் உள்ளது (Pending), சரிபார்க்கப்பட்டது (Verified) அல்லது நிராகரிக்கப்பட்டது (Rejected) என்று இருக்கும்.
இதில் விவரங்கள் சரியாக இருந்தால், சரிபார்க்கப்பட்டது என்று வந்துவிடும். இதற்கு பிறகு பிஎஃப் கிளைம்களை செய்து கொள்ளலாம். உடனடியாக வெரிபிகேஷன் செய்யப்பட்டு பணம் பேங்க் அக்கவுண்ட்டுக்கு மாற்றப்படும். இப்போது, 3 நாட்களில் பிஎஃப் கிளைம்கள் முடித்து வைக்கப்பட்டு வருகின்றன. யுபிஐ, ஏடிஎம் வழியாக பிஎஃப் பணத்தை விரைவில் எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications