பேங்க்ல பணம் டெப்பாசிட் செய்ய புது ரூல்.. எல்லா வங்கிகளிலும் அமலுக்கு வந்தது.. இனி என்ன செய்யணும்?
2026 புதிய வருமான வரி விதிகள் (New Income Tax Rules 2026) ஆனது, வங்கிகளில் பணம் டெப்பாசிட் செய்வதில் இருந்து இன்சூரன்ஸ் பேமண்ட் வரையிலாக பல முக்கிய மாற்றங்களை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன்கீழ் பான் கார்டு தேவைகள் தளர்த்தப்பட்டுள்ளன. கூடவே சில விதிகள் இன்னும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அப்படியாக என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன? இதோ விவரங்கள்:
பணம் டெப்பாசிட் செய்வதற்கான புதிய வரம்புகள்: முன்பு, ஒரே நாளில் ரூ.50,000 க்கு மேல் பணம் டெப்பாசிட் செய்ய பான் கார்டு நம்பரை கட்டாயம் குறிப்பிட வேண்டி இருந்தது. இந்த தேவை இப்போது நீக்கப்பட்டுள்ளது. அதாவது பான் கார்டு விவரங்களை கொடுக்காமலேயே இனி ரூ.50000 க்கு மேல் வங்கிகளில் டெப்பாசிட் செய்ய முடியும்.

பணம் டெப்பாசிட் செய்வதற்கான ரிப்போர்டிங் விதிகள் ரொக்க வைப்புகளுக்கான வருடாந்திர அறிக்கை வரம்பு (annual reporting threshold for cash deposits) ஆனது ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் ஆக கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ரூ.10 லட்சத்திற்கு மேல் வருடாந்திர ரொக்கப் பணம் எடுத்தல் (annual cash withdrawals) இனி பான் ரிப்போர்டிங் விதிகளின் கீழ் வரும்.
சொத்து பரிவர்த்தனை விதிகள்: சொத்து வாங்குதல் வாங்குதல், விற்பனை மற்றும் அன்பளிப்புகளுக்கான புதிய வரம்புகள் அசையா சொத்துக்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் பான் கோருவதற்கான வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து பரிவர்த்தனைகளுக்கான அறிக்கை வரம்புகளும் ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.45 லட்சமாக உயர்ந்துள்ளன. இந்த விதிகள் இப்போது குறிப்பாக அன்பளிப்பு பத்திரங்கள் மற்றும் கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தங்களையும் (JDA) உள்ளடக்கியுள்ளன, இது சொத்து தொடர்பான பான் இணக்கத்தின் வரம்பை விரிவுபடுத்துகிறது.
ரூ.45 லட்சத்திற்கு மேல்: புதிய இன்கம் டெக்ஸ் விதிமுறைகளின் கீழ், ரூ.45 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்து ஒப்பந்தங்களில் ஈடுபடும் நபர்கள், தங்களிடம் ஏற்கனவே பான் இல்லையென்றால், கட்டாயம் பான் பெற வேண்டும். முன்னதாக, இதுபோன்ற ஒப்பந்தங்களை படிவம் 60-ஐ பயன்படுத்தி முடிக்க முடிந்தது. இப்போது, அதிக மதிப்புள்ள சொத்து பரிவர்த்தனைகளுக்கான இந்த தளர்வு முடிவுக்கு வந்துள்ளது. இதனால், அன்பளிப்புகள் மற்றும் கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தங்கள் (JDA) உட்பட பல சந்தர்ப்பங்களில் பான் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணம் மற்றும் அந்நிய செலாவணி: வெளிநாட்டு பயண செலவுகள் மற்றும் அந்நியச் செலாவணி கொள்முதல்களுக்கான தனித்தனி பான் குறிப்பிடும் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2 லட்சத்தைத் தாண்டினால், இந்த பரிவர்த்தனைகள் பொருட்கள் மற்றும் சேவைகள் வாங்குதல் என்ற பரந்த பிரிவின் கீழ் வரலாம். பான் உள்ளதா இல்லையா என்பதை பொறுத்து, அந்நியச் செலாவணி அறிக்கை வரம்புகள் இப்போது வேறுபடுகின்றன.
காப்பீட்டு பிரீமியம் மற்றும் முத்திரைத்தாள்: பல புதிய பரிவர்த்தனைகள் இனி வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும். காப்பீட்டு நிறுவனங்கள், பான் வைத்திருப்பவர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேலான பிரீமியம் ரசீதுகளையும், பான் இல்லாதவர்களுக்கு ரூ.2.5 லட்சத்தையும் தெரிவிக்க வேண்டும். முத்திரைத்தாள் கொள்முதல்களும் கண்காணிக்கப்படும்; பான் வைத்திருப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் பான் இல்லாதவர்களுக்கு ரூ.1 லட்சம் என அறிக்கை வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஹோட்டல், விருந்து, ஈவென்ட்: ஹோட்டல் மற்றும் உணவகங்களில் ரொக்கமாக பணம் செலுத்துவதற்கான பான் குறிப்பிடும் வரம்பு, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.50,000 இல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், விருந்து மண்டபங்கள், மாநாட்டு மையங்கள் மற்றும் நிகழ்வு மேலாளர்களையும் உள்ளடக்கும் வகையில் இதன் வரம்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள், பெரிய நிகழ்வுகள் தொடர்பான ரொக்க பரிவர்த்தனைகளுக்கு இப்போது கடுமையான அறிக்கை மற்றும் சரிபார்ப்பு தேவைகள் விதிக்கப்படலாம்.
மோட்டார் வாகனம்: புதிய இன்கம் டேக்ஸ் விதிகளின்படி, ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள வாகனங்களை வாங்குவதற்கு பான் தேவை தொடர்கிறது. மேலும், இப்போது குறிப்பாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வரும் இருசக்கர வாகனங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. டிராக்டர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வங்கி வரைவோலைகள், பணம் செலுத்தும் ஆணைகள் மற்றும் வங்கியாளர் காசோலைகள் போன்ற ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு இனி தினசரி அடிப்படையில் பான் எண்ணை குறிப்பிட தேவையில்லை, இருப்பினும் வருடாந்திர கண்காணிப்பு விதிகள் தொடர்ந்து பொருந்தும்.
படிவம் 60-க்கு பதிலாக படிவம் 97: பான் நம்பர் இல்லாதவர்களுக்காக, படிவம் 60 க்கு பதிலாக புதிய படிவம் 97 அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், ரூ.45 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள சில உயர் மதிப்பு சொத்து பரிவர்த்தனைகளுக்கு இந்த வசதி இனி கிடைக்காது. ஏனெனில் அவற்றுக்கு பான் நம்பர் கட்டாயமாகும். புதுப்பிக்கப்பட்ட இந்த கட்டமைப்பு, குறைந்த அபாயமுள்ள பரிவர்த்தனைகளை எளிதாக்குவதையும், அதே நேரத்தில் பெரிய நிதி மற்றும் சொத்து தொடர்பான செயல்பாடுகள் மீதான கண்காணிப்பை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications