கூகுள் லென்ஸ் கொண்டு இதெல்லாம் செய்ய முடியும் என உங்களுக்கு தெரியுமா?
பொதுவாக கூகுள் லென்ஸ் சேவையானது மொபைல் போனின் கேமராவை பயன்படுத்தி நிஜ உலகில் நீங்கள் சந்திக்கும் புகைப்படங்கள், தெரியாத மொழி மற்றும் குறியீடு போன்றவற்றை புரிந்து கொண்டு அவற்றை உங்களுக்கு தெரிவிக்கும்.
கூகுள் லென்ஸ் - கூகுள் I/O 2017 நிகழ்வில் அனைவரின் கவனத்தை ஈர்த்த சேவை இந்த ஆண்டு பிக்சல் உள்பட பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகிறது.
பொதுவாக கூகுள் லென்ஸ் சேவையானது மொபைல் போனின் கேமராவை பயன்படுத்தி நிஜ உலகில் நீங்கள் சந்திக்கும் புகைப்படங்கள், தெரியாத மொழி மற்றும் குறியீடு போன்றவற்றை புரிந்து கொண்டு அவற்றை உங்களுக்கு தெரிவிக்கும். இதுமட்டுமின்றி கூகுள் லென்ஸ் பல்வேறு இதர பணிகளையும் உங்களுக்காக செய்யும். அப்படி கூகுள் லென்ஸ் எதை செய்யும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

இது தான் கூகுள் லென்ஸ்-ஆ?
நீங்கள் பயன்படுத்தும் சாதனத்திற்கு ஏற்ப கூகுள் லென்ஸ் வித்தியாசமாக இயங்கும். ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் தளங்களில் லென்ஸ் சேவையானது கூகுள் போட்டோஸ் செயலியில் இருந்தே வேலை செய்யும். இதனால் கூகுள் போட்டோஸ் செயலியில் புகைப்படத்தை தேர்வு செய்து லென்ஸ் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
கூகுள் போட்டோஸ் தானாக புகைப்படங்களை எடுக்காது என்பதால், கேமரா செயலியை திறந்து, புகைப்படங்களை எடுத்து அதன் பின் அவற்றை போட்டோஸ் செயலிக்கு மாற்ற வேண்டும்.
பல்வேறு ஸ்மார்ட்போன்களில் கூகுள் அசிஸ்டன்ட் சேவையிலேயே லென்ஸ் வந்து விட்டதால், ஏஆர் போன்ற அனுபவத்தை பெற முடியும். கூகுள் லென்ஸ் வேலை செய்யும் மாடல்களில் அசிஸ்டன்ட் சேவையை ஆன் செய்தால் வலதுபுற ஓரத்தில் லென்ஸ் ஐகானை பார்க்க முடியும். இதை க்ளிக் செய்து தேடல்களை மேற்கொள்ளலாம்.

பிஸ்னஸ் கார்டுகளை அட்ரெஸ் புக்-க்கு ஸ்கேன் செய்யலாம்
பிஸ்னஸ் கார்டு (விசிட்டிங் கார்டு) இன்றளவும் புழக்கத்தில் இருப்பதால் என்னவோ கூகுள் லென்ஸ் இவற்றை ஸ்கேன் செய்யும் வசதியை கொண்டுள்ளது. தொடர்ச்சியாக விசிட்டிங் கார்டு பெறுபவர்கள் இனி கூகுள் லென்ஸ் சேவையில் அவற்றை ஸ்கேன் செய்து ஸ்மார்ட்போனின் அட்ரெஸ் புக்கில் சேர்த்து கொள்ளலாம்.
முதற்கட்டமாக இந்த அம்சம் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் வேலை செய்கிறது. ஐஓஎஸ் தளங்களில் விசிட்டிங் கார்டு கொண்டுள்ள தகவல்களை மட்டும் புரிந்து கொள்ள முடியும். எனினும் இதை வைத்து கான்டாக்ட் உருவாக்காது.
ஆன்ட்ராய்டு தளத்தில் விசிட்டிங் கார்டை ஸ்கேன் செய்ததும், அவற்றை சேமிக்கும் முன் ஒருமுறை சரிபார்த்து அதன்பின் அவற்றை எடிட் செய்வது நல்லது. சில சமயங்களில் லென்ஸ் கார்டில் உள்ள சில தகவல்களை ஸ்கேன் செய்ய தவறியிருக்கலாம்.

புத்தகத்தின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்
புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடைவர்களுக்கு இந்த அம்சம் நிச்சயம் பிடிக்கும். புத்தக விற்பனை மையத்தில் நீங்கள் விரும்பும் புத்தகம் குறித்த முழு விவரம், அவற்றுக்கு வாசகர்கள் அளித்திருக்கும் விமர்சனம் உள்ளிட்டவற்றை கூகுள் லென்ஸ் உங்களுக்கு வழங்கும். இதை அறிந்து கொள்ள புத்தகத்தின் அட்டையை கூகுள் லென்ஸ்-இல் காண்பித்தால் போதுமானது.

கட்டிடக்கலை விவரங்கள்
நீங்கள் செல்லும் புதிய இடங்களில் உள்ள கட்டிடம் அல்லது பிரபல லேன்ட்மார்க் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள வேண்டுமா? கூகுள் லென்ஸ் கொண்டு கட்டிடத்தை ஸ்கேன் செய்தால் ஒற்றை புகைப்படம் கொண்டு கூகுள் லென்ஸ் உங்களுக்கு வேண்டிய தகவல்களை வழங்கும்.
இவ்வாறு செய்வது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதை போன்றதாகும். பிரபல கட்டிங்களின் விவரங்களை அறிய புகைப்படம் எடுக்கும் சாக்கில் குறிப்பிட்ட கட்டிடம் குறித்த முழு விவரங்களை அறிந்து கொள்ள முடியும் எனில், கேலரியில் புகைப்படமும் சேர்ந்து விடும் உங்களுக்கு வேண்டிய தகவல்களும் கிடைத்து விடும்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்
இயற்கை நமக்கு பரிசளித்து இருக்கும் வளங்கள் குறித்த தகவல்களை கூகுள் லென்ஸ் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதாவது குறிப்பிட்ட மரம், செடி அல்லது பூ வகைகளின் பெயர் உள்பட முழு விவரங்களை கூகுள் லென்ஸ் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
இயற்கை வளங்கள் மட்டுமின்றி விலங்குகள், பூச்சிகள் சார்ந்த விவரங்களையும் கூகுள் லென்ஸ் வழங்குகிறது.

காலென்டரில் திட்டமிடல்
கடைத்தெருவில் நடந்து போகும் போது உங்களை கவரும் அறிவிப்பு பலகைகள் அல்லது பேனர்களை பார்த்ததும் அந்த நிகழ்வுகளுக்கு போக வேண்டுமென நினைத்து உடனே அவற்றை புகைப்படம் எடுத்து மொபைலில் சேமித்து வைப்பீர்கள். எனினும் அவற்றை மறந்து விட்டு விரும்பிய நிகழ்விலும் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு விடும்.
கூகுள் லென்ஸ் பயன்படுத்தும் போது இவ்வாறு நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை நேரடியாக காலென்டரில் சேர்க்க முடியும். குறிப்பிட்ட பேனர் அல்லது விளம்பர பலகையை ஸ்கேன் செய்ததும் பல்வேறு ஆப்ஷன்களை திரையில் பார்க்க முடியும்.


உணவகங்களின் விமர்சனங்கள்
நீங்கள் பயணிக்கும் புது இடங்களில் தெரியாத உணவகங்களுக்கு செல்லும் நிலையில் இருந்தால், கடையின் பெயர் பலகையில் கூகுள் லென்ஸ்-ஐ காண்பியுங்கள். இவ்வாறு செய்ததும் கட்டிடங்கள், உணவகங்களின் விமர்சனங்கள் மற்றும் அருகாமையில் உள்ள மற்ற உணவகங்கள் சார்ந்த தகவல்களையும் பெற முடியும்.
டெக்ஸ்ட் காப்பி
கூகுள் I/O 2018 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த அம்சத்தில் பழைய டாக்குமென்ட் ஸ்கேன் அம்சம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்பு புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்ட நிலையில், இம்முறை கூகுள் லென்ஸ் இவற்றை டெக்ஸ்ட் வடிவில் காப்பி செய்ய முடியும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் கேமராவை எங்கு காண்பித்தாலும், மறுபுறம் இருக்கும் எழுத்துக்கள் மொபைல் போனின் க்ளிப் போர்டுக்கு காப்பி செய்யப்பட்டு விடும். இதை கொண்டு சர்ச் செய்யவோ வெளிநாட்டு மொழிகளில் இருப்பின் அவற்றை மொழி மாற்றம் செய்யவோ முடியும்.


Click it and Unblock the Notifications