31 ஆம் தேதிக்குள் 3 கெடு.. ITR Filing உட்பட இந்த ஜூலை மாதத்தில் கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய 3 விஷயங்கள்!
ஜூலை 1 ஆம் தேதி முதல் பல புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது ஒருபக்கம் இருக்க, 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பலரும் கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய 3 முக்கியமான விஷயங்களும், அதற்கான காலக்கெடுவும் கூட இருக்கின்றன.
அவைகள் அனைத்துமே வரி தொடர்பான பணிகள் ஆகும். அவைகளை நீங்கள் இதுவரை தள்ளிப்போட்டு வந்திருந்தால், அவற்றை முறைப்படுத்தி கொள்ள, செய்து முடிக்க 2026 ஜூலை மாதம் ஏற்றதாகும். ஏனென்றால் அடுத்த சில வாரங்களில் பல முக்கியமான காலக்கெடுகள் உள்ளன. இவற்றை தவறவிடுவது தாமத கட்டணம், வட்டி அல்லது தேவையற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம்.

நீங்கள் சம்பளம் பெறும் ஊழியராகவோ, தொழில் உரிமையாளராகவோ அல்லது பணியமர்த்துபவராகவோ இருந்தாலும், இந்த காலக்கெடுகளை கவனத்தில் கொள்வது கடைசி நேர மன அழுத்தத்தை தவிர்க்க உதவும். அப்படியாக ஜூலை 2026 இல் நீங்கள் தவறவிடக்கூடாத மூன்று முக்கிய வரி காலக்கெடுகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
ஜூலை 7 - டிடிஎஸ் செலுத்துவதற்கான காலக்கெடு: முதலாவது முக்கியமான காலக்கெடு ஜூலை 7 அன்று வருகிறது. வருமான வரிச் சட்டம் 2025 இன் கீழ் மதிப்பீட்டு அதிகாரியால் (Assessing Officer) காலாண்டு அடிப்படையில் வரி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தால், ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான டிடிஎஸ்-ஐ செலுத்துவதற்கான கடைசி தேதி இதுவாகும். ஜூன் 2026 இல் முடிவடையும் காலாண்டில் பெறப்பட்ட குறிப்பிட்ட அறிவிப்புகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட படிவங்களை பதிவேற்றுவதற்கும் இதே காலக்கெடு பொருந்தும்.
இது தவிர, அரசு அலுவலகங்கள், பங்குச் சந்தைகள், அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள், ஐஎப்எஸ்சி (IFSC) யூனிட்கள் மற்றும் வெளிநாடு வாழ் முதலீட்டாளர்களுடன் (non-resident investors) தொடர்புடைய இடைத்தரகர்களுக்கான பல்வேறு தகவல் சமர்ப்பிப்பு நடைமுறைகளும் மாதத்தின் மத்தியில் திட்டமிடப்பட்டுள்ளன. இவ்வகைகளை சார்ந்த நிறுவனங்கள், தங்களுக்குரிய சமர்ப்பிப்பு பணிகளை உரிய நேரத்தில் முடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஜூலை 30 - சல்லான்-கம்0ஸ்டேட்மென்ட் (Challan-cum-statement) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு: மற்றொரு முக்கியமான விதிமுறை சார்ந்த தேதி ஜூலை 30 ஆகும். ஜூன் 2026 இல் பிடித்தம் செய்யப்பட்ட குறிப்பிட்ட வகையிலான வரிகளுக்கான 'சல்லான் மற்றும் விவர அறிக்கையை' (challan-cum-statement), வரி பிடித்தம் செய்பவர்கள் இந்த தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
வரி விதிமுறைகளை பின்பற்றுவதற்கும் அபராதங்களை தவிர்ப்பதற்கும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் இந்த அறிக்கையை தாக்கல் செய்வது அவசியமாகும். மூலத்தில் வரி பிடித்தம் (TDS) செய்யும் பொறுப்பை கொண்ட வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள், கடைசி நேரத் தவறுகளை தவிர்க்க தங்கள் ஆவணங்களை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும்.
ஜூலை 31 - வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி: இம்மாதத்தின் மிக முக்கியமான வரி தொடர்பான காலக்கெடு ஜூலை 31 ஆகும். 2025-26 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2026-27) வருமான வரி கணக்கை, ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2 படிவங்களை பயன்படுத்தி தாக்கல் செய்யும் தனிநபர்களுக்கு இதுவே கடைசி தேதியாகும். இந்த காலக்கெடுவை தவறவிடும் வரி செலுத்துவோர், தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கலாம்.
அத்துடன், பொருந்தக்கூடிய சூழல்களில், சில நஷ்டங்களை அடுத்தடுத்த மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு கொண்டு செல்லும் (carry forward) சலுகையையும் இழக்க நேரிடலாம். வருமான வரி இணையதளத்தில் அதிக நெரிசல் அல்லது ஆவணங்கள் விடுபடுதல் போன்ற காரணங்களால் தாக்கல் செய்யும் செயல்முறை தாமதமாகலாம். எனவே விரைந்து செயல்படவும்.
கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம்: 2026 ஜூலை மாதம் அணை முக்கியமான வரி மற்றும் விதிமுறை சார்ந்த காலக்கெடுக்கள் நிறைந்ததாக இருப்பதால், இது நிதியாண்டின் மிக பரபரப்பான மாதங்களில் ஒன்றாக அமைகிறது. வரி தொடர்பான பணிகளை முன்கூட்டியே முடிப்பது அபராதம் மற்றும் வட்டியை தவிர்க்க உதவுவதோடு, ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை சரிசெய்யப் போதுமான நேரத்தையும் வழங்குகிறது.
டிடிஎஸ் தொகையை செலுத்துவது, கட்டாய அறிக்கைகளை தாக்கல் செய்வது அல்லது வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பது என எதுவாக இருந்தாலும், முன்கூட்டியே திட்டமிடுவது முழு செயல்முறையையும் எளிதாகவும், மன அழுத்தமற்றதாகவும் மாற்றும்.


Click it and Unblock the Notifications