வாடா குட்டி பையா.. பாக்கெட் சைஸ்ல 10000mAh பவர் பேங்க்.. 2, 3-ஆ வாங்கி போடுற விலைக்கு 22.5W பாஸ்ட் சார்ஜிங்!
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனமானது சீனாவில் - ஷாவ்மீ பவர் பேங்க் 10000 பாக்கெட் எடிஷன் 2026 (Xiaomi Power Bank 10000 Pocket Edition 2026) என்கிற புதிய பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வரையிலாக இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் இது மிகவும் மலிவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஷாவ்மீ பவர் பேங்க் 10000 பாக்கெட் எடிஷன் 2026 முக்கிய அம்சங்கள்: இந்த பவர் பேங்க் 2C+1A போர்ட் கட்டமைப்பை பயன்படுத்துகிறது. இந்த அமைப்பில் பில்ட்-இன் USB-C கேபிள், ஒரு இரண்டாம் நிலை USB-C போர்ட் மற்றும் ஒரு வழக்கமான USB-A போர்ட் ஆகியவைகள் உள்ளன. அதாவது தனித்தனி கேபிள்களை எடுத்து செல்ல விரும்பாத பயனர்களுக்கு இந்த ஒருங்கிணைந்த கேபிள் - நடைமுறைக்கு மிகவும் ஏற்ற அம்சமாகும்.

மேலும் இது 22.5W வரை டூ-வே சார்ஜிங்கை ஆதரிக்கிறது. தனித்தனியான USB-C மற்றும் USB-A போர்ட்களும் தனித்தனியாக 22.5W வரை அவுட்புட்டை வழங்குகின்றன. இந்த பவர் பேங்க் PD 3.0, QC 3.0, PPS, AFC மற்றும் SCP உள்ளிட்ட பல பொதுவான ஃபாஸ்ட்-சார்ஜிங் நெறிமுறைகளை ஆதரிக்கிறது, இதனால் இது தற்போதைய பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் சிறிய மின்னணு டிவைஸ்களுடன் இணக்கமாக உள்ளது.
இரண்டு அல்லது மூன்று டிவைஸ்கள் ஒரே நேரத்தில் செருகப்படும்போது, இந்த பவர் பேங்க் மின் விநியோகத்தை சரிசெய்து, மொத்த வெளியீட்டை ஒருங்கிணைந்த 15W இல் கட்டுப்படுத்துகிறது. ஷாவ்மீ ஒரு பேட்டரி மேலாண்மை அமைப்பை சேர்த்துள்ளது, இது பயனர்கள் USB-C டேட்டா போர்ட்டை பயன்படுத்தி பவர் பேங்கை சிஸ்டமுடன் இணைக்க அனுமதிக்கிறது.
இணைக்கப்பட்டவுடன், பயனர்கள் குறிப்பிட்ட பேட்டரி ஹெல்த் அளவீடுகளை பார்க்கலாம். கிடைக்கக்கூடிய தரவுகளில் துல்லியமான சுழற்சி எண்ணிக்கை, வெப்பநிலை அளவீடுகள், சார்ஜிங் வரலாறு மற்றும் பொதுவான பேட்டரி நிலை ஆகியவை அடங்கும். இந்த பவர் பேங்க் சீனாவின் புதிய GB 47372-2026 மொபைல் பவர் பேங்க் பாதுகாப்பு தரத்திற்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஷாவ்மீயின் கூற்றுப்படி, பேட்டரி செல்கள் ஊசி ஊடுருவல், 12kN அழுத்தம் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 135°C வெப்பத்திற்கு உட்படுத்துதல் உள்ளிட்ட தரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளன. இது அதிக மின்னழுத்தம், ஷார்ட் சர்க்யூட்கள் மற்றும் வெப்பநிலை மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய 16 அடுக்கு மின் பாதுகாப்பையும் கொண்டுள்ளது.
10,000mAh திறன் என்பது 37Wh மதிப்பீட்டிற்கு சமம். இது சர்வதேச விமான போக்குவரத்து வரம்புகளுக்குள் வருவதால், வணிக விமானங்களில் கையடக்க பயண பெட்டியில் இது எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். இதன் கட்டமைப்பு வட்டமான PC+ABS பிளாஸ்டிக்கால் ஆனது மற்றும் இது கிரே ப்ளூ மற்றும் லைட் காபி ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் சீனாவில் விற்கப்படுகிறது.
ஷாவ்மீ பவர் பேங்க் 10000 பாக்கெட் எடிஷன் 2026 விலை: ஷாவ்மீ நிறுவனத்தின் இந்த புதிய 10000mAh பவர் பேங்க் ஆனது, சீனாவில் தற்போது யூபின் (Youpin) தளத்தில் 129 யுவானுக்கு (அதாவது இந்திய ருபாய் மதிப்பின்படி சுமார் ரூ.1830) என்கிற அறிமுக விலையில் வாங்க கிடைக்கிறது. ஆனால் ஷாவ்மீ நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பவர் பேங்கின் வழக்கமான சில்லறை விலை 149 யுவான் ஆகும்; அதாவது இந்து ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.2110 ஆகும்.


Click it and Unblock the Notifications