நச்சென்ற விலை.. அதற்கேற்ற அம்சங்கள்.. Nothing Ear 2 இந்தியாவில் அறிமுகம்.. மார்ச் 28 முதல் விற்பனை!
ஒருவழியாக நத்திங் நிறுவனத்தின் இரண்டாவது ஆடியோ தயாரிப்பான நத்திங் இயர் 2 (Nothing Ear 2) இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகமானது. நச்சென்ற விலை மற்றும் அந்த விலைக்கேற்ற அம்சங்களுடன் வரும் இந்த இயர்பட்ஸ் வருகிற மார்ச் 28 முதல் விற்பனைக்கு வருமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நத்திங் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்போன்ஸ் ஆனது கடந்த ஆண்டு அறிமுகமான இயர் 1 உடன் ஒப்பிடும் போது பல வகையான மேம்பாடுகளை பெற்றுள்ளது. இது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதன் இந்திய விலை நிர்ணயம் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

நத்திங் இயர் 2 வடிவமைப்பு மற்றும் விரிவான அம்சங்கள்: வடிவமைப்பை பொறுத்தவரை இது, நத்திங் இயர் 1-ஐ போலவே ஒரு ட்ரான்ஸ்பெரன்ட் டூயல்-சேம்பர் (Transparent Dual-chamber) டிஸைனுடன் வருகிறது. இது நிறுவனத்தின் 11.6 மிமீ கஸ்டமைஸ்டு ட்ரைவர்களால் (Customised drivers) இயக்கப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு இயர்பீஸிலும் 3 ஏஐ-சப்போர்ட் மைக்ரோஃபோன்ஸ் உள்ளன.
இன்-இயர் இயர்போன்களான நத்திங் இயர் 2-வில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனும் (Active noise cancellation) உள்ளது. அறியாதோருக்கு ஏஎன்சி (ANC) என்பது பயனர்களுக்கு சிறப்பான கேட்கும் அனுபவத்தை வழங்க, 40dB வரையிலாக பேக்கிரவுண்ட் மற்றும் சுற்றுப்புற இரைச்சல்களை அகற்றும் ஒரு அம்சமாகும்.
நத்திங் இயர் 2 இயர்பட்ஸ் ஆனது ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டியுடன் வருகிறது; இது புதிய LHDC 5.0 கோடெக்கை ஆதரிக்கின்றன. மேலும் இது AAC மற்றும் SBC ப்ளூடூத் கோடெக்குகளையும் ஆதரிக்கின்றன. மேலும் இந்த இயர்பீஸ்கள் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் கொண்டுள்ளன, அதே நேரத்தில் இதன் கேஸ் ஐபி55 ரேட்டிங்கிலான கட்டமைப்பை கொண்டுள்ளது.
நத்திங் எக்ஸ் ஆப்ஸ் வழியாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டுக்குமே இணக்கமானதாக இருக்கும் நத்திங் இயர் 2 ஆனது ஆண்ட்ராய்டு போன்களுடன் தடையற்ற கனெக்டிவிட்டியை உறுதி செய்யும் கூகுள் ஃபாஸ்ட் சப்போர்ட் உடன் வருகிறது; மேலும் விண்டோஸ் 10 டிவைஸ்ளுடன் விரைவாக கனெக்ட் ஆக ஸ்விஃட் பேர் அம்சத்தையும் ஆதரிக்கிறது.
கேமிங் செஷன்களுக்கான லோ லேக் மோட் உடன் வரும் நத்திங் இயர் 2-வின் ஒவ்வொரு இயர்பீஸிலும் 33எம்ஏஎச் பேட்டரி உள்ளது மற்றும் இதன் சார்ஜிங் கேஸில் 485எம்ஏஎச் பேட்டரி உள்ளது. நத்திங் இயர் 2-வின் ஏஎன்சி ஆஃப் செய்யப்பட்டு இருந்தால், இது சிங்கிள் சார்ஜில் 36 மணிநேர பிளேபேக்கை வழங்கும். கடைசியாக இது யூஎஸ்பி டைப்-சி போர்ட்டை கொண்டுள்ளது.
நத்திங் இயர் 2 விலை மற்றும் விற்பனை: நத்திங் இயர் 2-வின் இந்திய விலை ரூ.9,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பிளிப்கார்ட் (Flipkart), மின்த்ரா (Myntra) மற்றும் பல்வேறு ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக வருகிற மார்ச் 28 ஆம் தேதி மதியம் 12:00 மணி முதல் விற்பனைக்கு வரும். நினைவூட்டும் வண்ணம் நத்திங் இயர் 1 ஆனது கடந்த ஜூலை 2021இல் ரூ. 5,999 க்கு அறிமுகமானது!


Click it and Unblock the Notifications








