Samsung அண்ணே இதை செய்ய உங்களுக்கு இவ்வளவு நாள் ஆச்சா? சுழலும் டிஸ்பிளே பேசலுடன் Smartwatch.!
எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஜாம்பவான்.. எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் ஒரு மான்ஸ்டர் நிறுவனமாக திகழும் சாம்சங் (Samsung) நிறுவனம், அதன் வரிசையில் அடுத்து ஒரு புது ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த வாட்சில் நிறுவனம் ரோட்டேட்டிங் டிஸ்பிளே பேசல்களை கொண்டுவரவுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய ரிலீஸ் ஆனா சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 (Samsung Galaxy Watch 5) சீரிஸ் நுகர்வோருக்கு பல மாடல்களை வழங்கியது. இருப்பினும், அதன் ஸ்மார்ட் வாட்ச்களின் மிகவும் விரும்பப்படும் அம்சங்களில் ஒன்றான சுழலும் டிஸ்பிளே பேசல் அம்சத்தை இந்த வாட்ச் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மையாகும். ரோட்டேட்டிங் டிஸ்பிளே பேசல் அம்சத்தை சாம்சங் சில காலத்திற்கு முன்பு கைவிட்டது.

சாம்சங்கின் இந்த முடிவு பலரை ஏமாற்றமடையச் செய்தது. ஸ்மார்ட் வாட்ச்களில் சுழலும் டிஸ்பிளே பேசல் (Rotating Display Bezel) அம்சம் பலரால் விரும்பப்பட்டது. சாம்சங்கின் ஸ்மார்ட் வாட்ச் என்றாலே அதில் ரோட்டேட்டிங் டிஸ்பிளே பேசல் இருக்கும் என்பது போன்ற அளவில் நிறுவனம் அதை ஒரு வழக்கமாக வைத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஸ்மார்ட் வாட்ச் சாதனங்கள் சாம்சங் "கியர்" என்ற பெயரில் விற்கப்பட்டன.
ஆனால், இது இடையில் நிறுத்தப்பட்டது. ரோட்டேட்டிங் டிஸ்பிளே பேசல் இல்லாத வாட்ச்களை சாம்சங் அறிமுகம் செய்தது. இது சாம்சங் ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போனது. இதனால், சாம்சங் நிறுவனம் அடுத்து அறிவிக்கவிருக்கும் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 (Samsung Galaxy Watch 6) சீரிஸ் இல் ரசிகர்களின் விருப்பமான சுழலும் பேசல் அம்சத்தை மீண்டும் கொண்டு வரவுள்ளதாக சில அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
ரோட்டேட்டிங் டிஸ்பிளே பேசல் அம்சம், முதலில் சாம்சங் கியர் S2 வாட்ச்சில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் பயனர்கள் டிஸ்பிளேவைத் தொடாமல், வாட்சின் உள்ளடக்கத்தை ஸ்க்ரோல் செய்ய இந்த ரோட்டேட்டிங் டிஸ்பிளே பேசல் அனுமதித்தது. இந்த அம்சம் பயனர்களால் பரவலாகப் பாராட்டப்பட்டது. சாம்சங்கின் ஸ்மார்ட்வாட்ச் வரிசையின் எதிர்கால மறு செய்கைகளில் இருந்து இது காணாமல் போனதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சாம்சங் தனது ரசிகர்களின் விருப்பத்திற்குச் செவி சாய்த்து, அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்வாட்ச் சாதனமான சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 ப்ரோ மாடல்களில் பிஸிக்கல் ரோட்டேட்டிங் டிஸ்பிளே பேசல் அம்சத்தை மீண்டும் கொண்டு வருவதாகத் தெரிகிறது. இது முந்தைய மாடல்களில் பயன்படுத்தப்பட்ட ஹாப்டிக் எடிஷன் டச் சென்சிடிவ் தொழில்நுட்பத்தைப் போல தனித்துவமானதாகவோ அல்லது உள்ளுணர்வுடனோ இருக்குமா? என்பது இன்னும் தெளிவாகவில்லை.
ஆனால், நிச்சயமாக ரோட்டேட்டிங் டிஸ்பிளே பேசல் அம்சம் வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 ப்ரோ மாடல்களில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் இரண்டு அளவுகளில் வரும். ரசிகர்களை பொறுத்தவரை சாம்சங்கின் ரோட்டேட்டிங் டிஸ்பிளே பேசல் அம்சம், மெய்நிகர் அல்லது டச் கட்டுப்பாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்த அம்சம் மிகவும் திருப்திகரமானது மற்றும் மிகவும் துல்லியமானது என்று கூறப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 ப்ரோ அதனுடன் இதய துடிப்பு மானிட்டர் மற்றும் தூக்கக் கண்காணிப்பு உட்பட பல அம்சங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வாட்ச் முந்தைய மாடலை விட நீண்ட பேட்டரி ஆயுளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட கால உபயோகத்தில், ஸ்மார்ட்வாட்ச் நீடித்து நிலைக்க வேண்டும் என்று விரும்புவோருக்கு இது ஒரு அத்தியாவசிய அம்சமாகும். இதன் விலை விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications








