ஆரம்பமே அம்பானி அதிரடி.. போனை எடுக்காமலேயே யுபிஐ பேமெண்ட்.. அசத்தும் Jio ஏஐ ஸ்மார்ட் கண்ணாடிகள்..
கடைகளில் பொருட்கள் வாங்கும்போது ஸ்மார்ட்போனை வெளியே எடுக்காமலேயே பணம் செலுத்தும் புதிய வசதியை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது 'ஜியோ ஏஐ ஸ்மார்ட் கண்ணாடிகள்' (Jio AI Glasses) மூலம், க்யூ.ஆர் (QR) கோடைப் பார்த்து, குரல் வழியாகக் கட்டளையிட்டு எளிதாகப் பணம் செலுத்த முடியும். இந்தப் புதிய தொழில்நுட்பத்தை ஜியோ காட்சிப்படுத்தியுள்ளது.
தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்று வரும் 'இந்தியா மொபைல் காங்கிரஸ் 2026' நிகழ்வில், ஜியோ நிறுவனம் தனது புதிய ஏஐ சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கேமரா கண்ணாடிகள், ஆடியோ கண்ணாடிகள் மற்றும் இயர்போன்கள் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய அணியக்கூடிய சாதனங்கள் இடம்பெற்றுள்ளன.

ஜியோ ஏஐ ஸ்மார்ட் கண்ணாடிகள் அம்சங்கள்
க்யூஆர் கோடை ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலம் ஸ்கேன் செய்து, குரல் வழியாகக் கட்டளையிட்டால் போதும். யுபிஐ (UPI) மூலம் விரைவாகப் பணம் செலுத்த முடியும். அதுவும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (NPCI) யுபிஐ சர்க்கிள் விதிகளின்படி, ஜியோ ஏஐ ஸ்மார்ட் கண்ணாடி மூலம் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரையிலும், ஒரு மாதத்திற்கு மொத்தம் ரூ.15,000 வரையிலும் பணம் செலுத்தலாம்.
ஜியோ ஏஐ கண்ணாடிகள் ஆதரிக்கும் மற்றொரு முக்கிய அம்சம் நேரடி மொழிபெயர்ப்பு ஆகும். அதாவது வெவ்வேறு இந்திய மொழிகளைப் பேசுபவர்கள் ஒருவருக்கொருவர் பேசும்போது, அவர்கள் பேசும் மொழியை உடனுக்குடன் மொழிபெயர்த்துப் புரிந்துகொள்ள உதவும் வசதியும் இந்தச் சாதனங்களில் இடம்பெற்றுள்ளது.
அதேபோல் பயணத்தின்போதும், வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போதும், இந்த ஜியோ ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலம் கிரிக்கெட் போட்டிகளின் நேரலை ஆடியோ வர்ணனையைக் கேட்டு ரசிக்கலாம். குறிப்பாக அலுவலகக் கூட்டங்களில் பேசப்படும் முக்கியமான தகவல்களையும் விவரங்களையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தானாகவே குறிப்புகளாகப் பதிவு செய்யும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.
பல்வேறு இந்திய மொழிகளைப் புரிந்துகொண்டு, அவற்றில் பதிலளிக்கும் வகையில் பிரத்யேக ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் (AI Voice Assistant) வசதியுடன் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜியோ நிறுவனம்.
வழக்கமாகக் கடைகளில் பணம் செலுத்துவதற்கு ஸ்மார்ட்போனை வெளியே எடுத்து, அன்லாக் செய்து, பேமெண்ட் செயலியைத் திறந்து, க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். ஆனால், ஜியோவின் புதிய ஏஐ ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலம் இந்த நடைமுறைகளை எளிதாக்க முடியும். க்யூஆர் கோடைப் பார்த்து, குரல் வழியாகக் கட்டளையிட்டாலே போதும், யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி இதில் இடம்பெற்றுள்ளது. அதேசமயம் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் சிறந்த பாதுகாப்பு வசதியும் உள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தை வெறும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் கருவியாக மட்டும் பயன்படுத்தாமல், அன்றாட வேலைகளை எளிதாகச் செய்து முடிக்கும் சாதனமாக ஜியோ உருவாக்கியுள்ளது. ஸ்மார்ட்போன் திரையை அடிக்கடி பார்ப்பதையும், கீபோர்டைப் பயன்படுத்துவதையும் குறைத்து, குரல் வழியாகவே பல பணிகளைச் செய்ய இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் உதவும். இதன் மூலம் பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி, வேலைத்திறனை அதிகரிக்க முடியும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.
இந்திய மக்களின் அன்றாடத் தேவைகள் மற்றும் பல்வேறு மொழிப் பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு இந்தச் சாதனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், ஜியோவின் புதிய ஏஐ அணியக்கூடிய சாதனங்கள் தொழில்நுட்பத் துறையில் கவனத்தை ஈர்த்துள்ளன.


Click it and Unblock the Notifications
