ஆளுக்கு 2 வாங்கும் விலை.. 43.5 கிராமில் 54 மணிநேர பேட்டரி.. OPPO-வின் புது ANC இயர்பட்ஸ்.. எந்த மாடல்?
ஒப்போ (OPPO) நிறுவனம் "பக்காவான பட்ஜெட் விலையில்" ஒரு புதிய இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்வதன் மூலம், இந்தியாவில் தனது ஆடியோ தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்த உள்ளது. அது ஒப்போ என்கோ ஏர் 5 (OPPO Enco Air 5) ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலாகும்.
நல்ல விஷயம் என்னவென்றால், ஒப்போ என்கோ ஏர் 5 மாடலானது ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகமாகி விட்டதால், அதன் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்து எந்த குழப்பமும் இல்லை. அமேசான் இந்தியா வலைதளத்தில் உள்ள மைக்ரோசைட் மூலம், ஒப்போ நிறுவனம் இந்த புதிய இயர்பட்ஸ் மாடலை டீஸ் செய்ய தொடங்கியுள்ளது.

இருப்பினும் ஒப்போ நிறுவனம் இதன் வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. அமேசான் லிஸ்டிங் ஆனது இது "விரைவில் வருகிறது" (Coming Soon) என்று கூறுகிறது ஆக வரும் வாரங்களில் இதன் அறிமுகம் நடைபெறக்கூடும். இந்தியாவில் ஒப்போ எங்கோ ஏர் 5 ப்ரோவை (OPPO Enco Air 5 Pro) அறிமுகப்படுத்திய சிறிது காலத்திலேயே அடுத்த மாடல் அறிமுகமாக உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது, ஒப்போ நிறுவனம் அனைத்து விலை பிரிவுகளிலும் தனது தயாரிப்புகளை விரிவுபடுத்த விரும்புவதை குறிக்கிறது.
என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? சீனாவில் ஒப்போ என்கோ ஏர் 5 (Oppo Enco Air 5) இயர்பட்ஸ் மாடலானது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.2800 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ எங்கோ ஏர் 5 ப்ரோ மாடலானது ரூ.4,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆக இந்தியாவில் ஒப்போ என்கோ ஏர் 5-ன் விலை பெரும்பாலும் ரூ.3000 - ரூ.3500 க்குள் இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.
ஒப்போ என்கோ ஏர் 5 இயர்பட்ஸ் முக்கிய அம்சங்கள்: இது ஒயிட், பிளாக் மற்றும் பர்பிள் கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாய்ஸ் கேன்சலேஷனை பொறுத்தவரை, ஒப்போ என்கோ ஏர் 5 இயர்பட்ஸ்களில் 5,000Hz ப்ரெக்வன்சி ரேன்ஜை உள்ளடக்கிய 52dB வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) உள்ளது.
போன் கால்களின் போது பயனரின் குரலை தனிமைப்படுத்த, இந்த இயர்பட்ஸ்கள் மூன்று மைக்ரோஃபோன் அமைப்பையும் பயன்படுத்துகின்றன. மேலும் மணிக்கு 25 கி.மீ. வரையிலான காற்றின் வேகத்திலும் கூட, ஒப்போ என்கோ ஏர் 5 மாடலன் குரலின் தெளிவை பராமரிக்க முடியும் என்று ஒப்போ நிறுவனம் கூறுகிறது.
என்கோ ஏர் 5 இயர்பட்ஸ்களில், வலுவான பேஸ் மற்றும் தெளிவான ஹைஸ்களுக்காக வடிவமைக்கப்பட்ட 12மிமீ டைனமிக் டிரைவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை தனிப்பயனாக்கப்பட்ட சவுண்ட் ட்யூனிங்கிற்கான 10-பேண்ட் கஸ்டம் EQ-வை கொண்டுள்ளன, AAC மற்றும் SBC கோடெக்குகளை ஆதரிக்கின்றன, மேலும் பிரத்யேக கேமிங் சவுண்ட் எபெக்ட்களுடன் ஸ்பேஷியல் ஆடியோவையும் உள்ளடக்கி உள்ளன.
இதன் ஒவ்வொரு இயர்பட்டும் 4.3 கிராம் எடையை கொண்டுள்ளது. மேலும், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP55 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. அதாவது, உடற்பயிற்சியின் போது ஏற்படும் வியர்வை அல்லது லேசான மழையை இவைகளால் தாங்க முடியும். சார்ஜிங் கேஸ் ஒப்பீட்டளவில் சிறியதாக உள்ளதும், இதன் எடை 43.5 கிராம் ஆகும்.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, ஒப்போ என்கோ ஏர் 5 பட்ஸ் ஆனது ப்ளூடூத் 6.1-ஐ ஆதரிக்கிறது. அன்றாட பயன்பாட்டிற்காக, இது டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டியை ஆதரிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் ஒரு போன் மற்றும் டேப்லெட்டிற்கு இடையில் தடையின்றி ஆடியோவை மாற்றிக்கொள்ள முடியும். கேமிங் மற்றும் வீடியோ பிளேபேக்கிற்காக 47ms லோ லேடன்சி மோட்-ஐயும் கொண்டுள்ளது.
பேட்டரி லைஃப்பை பொறுத்தவரை, ஒப்போ என்கோ ஏர் 5 பட்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 13 மணிநேரம் வரையிலும், சார்ஜிங் கேஸுடன் 54 மணிநேரம் வரையிலும் பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. ANC இயக்கப்பட்டால், பேட்டரி லைஃப் இயர்பட்களுக்கு 6.5 மணிநேரமாகவும், மொத்தமாக 27 மணிநேரமாகவும் குறைகிறது.
இது ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது; 10 நிமிட டாப்-அப் மூலம் நான்கு மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை பெறலாம் என்று ஒப்போ கூறுகிறது. இந்த இயர்பட்ஸ்களில், காதுக்குள் இருப்பதை கண்டறியும் வசதி ஆன இன்-இயர் டிடெக்ஷன், ரிமோட் கேமரா கண்ட்ரோல், தனிப்பயனாக்கக்கூடிய டச் கண்ட்ரோல்கள் மற்றும் 24 மொழிகளுக்கான ஏஐ-பவர்டு மொழிபெயர்ப்பு போன்ற சில ஸ்மார்ட் அம்சங்களையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications