சீனாக்காரன் என்னென்ன கண்டுப்பிடிக்குறான் பாருங்க.. 100% சார்ஜ் ஆன பின்னர், தானாகவே கழன்று கொள்ளும் சார்ஜர்..
இரவு முழுவதும் ஸ்மார்ட்போனை சார்ஜ்ஜில் வைப்பது மிகவும் ஆபத்தானது. இது உங்கள் போனின் பேட்டரி ஆயுளை குறைக்கும். அதுவும் இரவு முழுக்க சார்ஜ் செய்யும் போது, நீண்ட சார்ஜிங் நேரம் மெட்டாலிக் லித்தியத்தை தாக்கி, நீண்ட காலத்திற்குச் செயல்படும் பேட்டரி நிலைத்தன்மையை இது குறைக்கிறது.
ஆகவே இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்நிலையில் அதிக நேரம் சார்ஜிங் பிரச்சனையை தீர்க்க குவாஜியா என்ற ஒரு சீன நிறுவனம் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சீனாவை சேர்ந்த குவாஜியா (Kuwajia) எனும் நிறுவனம், ஸ்மார்ட்போனின் பேட்டரி 100 சதவீதத்தை எட்டியவுடன் அதன் சாக்கெட்டிலிருந்து வெளியே குதிக்கும் ஒரு தானியங்கி மொபைல் சார்ஜரைக் (charger) கண்டுபிடித்து அசத்தியுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் இந்த சார்ஜரை ஒரு ஸ்பிரிங் மற்றும் மின்காந்தத்துடன் வடிவமைத்துள்ளது. ஆகவே உங்கள் போன் சார்ஜ் ஆகி முடிந்ததும், அந்த பிளக் தானாகவே வெளியேறி உடனடியாக மின்சாரத்தைத் துண்டித்துவிடும்.
பலர் இந்த புதிய வகை சார்ஜரை, ஒரு புத்திசாலித்தனமான சிறிய உத்தி என்று கூறுகின்றனர். ஆனால் சில இதுபோன்ற சார்ஜர்கள் தேவையா? என்று கேட்டு வருகின்றனர். நாம் இப்போது பயன்படுத்தி வரும் போன்களில் 100 சதவீதம் சார்ஜ் ஆகி முடிந்த பிறகும், செருகியபடியே இருக்கும். அதை நாம் தான் எடுத்துவிட வேண்டும். ஒருவேளை நாம் சார்ஜரை எடுக்க மறந்தால் போனுக்கோ அல்லது சார்ஜருக்கோ சிக்கல்களை உருவாக்கிவிடும்.
ஆனால் குவாஜிய நிறுவனம் உருவாக்கிய சார்ஜரில் பிரச்சனை இருக்காது. அதாவது அது தானாகவே வெளியே வந்துவிடும். இந்த புதிய வகை சார்ஜரின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
1.இந்த சார்ஜர் உங்கள் பேட்டரியை முழுமையாக நிரம்பியிருப்பதைக் கண்டறிகிறது.
2.இதில் ஒரு மின்காந்தம் பூட்டைத் திறக்கிறது.
3.ஸ்பிரிங் சார்ஜரை வெளியே தள்ளுகிறது.
4.உடனடியாக மின்சாரம் நின்றுவிடுகிறது.
5.போன் அதிக வெப்பமடைவதைத் தடுக்க உதவுகிறது.
தற்போது சீனாவில், ஸ்மார்ட்போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்ய விட்டுச் செல்பவர்களுக்கு, குவாஜியா தன்னை மிகவும் பாதுகாப்பான தேர்வுகளில் ஒன்றாக விளம்பரப்படுத்தி வருகிறது.
ஆனால் சாம்சங், சியோமி, ஆப்பிள், ஒன்பிளஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே அறிவார்ந்த பேட்டரி மேலாண்மையை உள்ளடக்கியுள்ளன. இந்த அமைப்புகள் போன் முழுமையாக சார்ஜ் ஆனதும் சார்ஜ் செய்வதை நிறுத்துவது, மின்னோட்டத்தைக் குறைப்பது, அதிக வெப்பமடைவதைத் தடுப்பது போன்ற பல அம்சங்களைச் செயல்படுத்துகின்றன. ஆகவே இப்போது உங்கள் போன் அதிகப்படியாக சார்ஜ் செய்வதற்கோ அல்லது பழுதாக்குவதற்கோ ஆன வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தான் கூறவேண்டும்.
இருந்தபோதிலும் சீன நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த புதிய சார்ஜரில் பல நன்மைகள் உள்ளன. அதாவது பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனதும் தேவையற்ற மின்சாரப் பயன்பாட்டை இந்த சார்ஜர் துண்டிக்கிறது. தீ விபத்துகளுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கிறது இந்த சார்ஜர். மேலும் ஸ்மார்ட் பேட்டரி பாதுகாப்பு இல்லாத பழைய போன்களுக்கு இந்த சார்ஜர் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் கணிக்க முடியாத மின்னழுத்தம் உள்ள இடங்களில் இது வசதியானது.

நீங்கள் உங்கள் போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்கிறீர்கள் என்றாலோ அல்லது உங்கள் வயரிங் சார்ஜர்கள் சற்று பழையதாக இருந்தலோ, இது போன்ற பாதுகாப்பு சார்ஜர்கள் கவர்ச்சிகரமாக தோன்றலாம். ஆனால் நீங்கள் சில அடிப்படை வழிமுறைகள் மூலம் சார்ஜிங் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கலாம். அதாவது போனின் அசல் சார்ஜ்களை பயன்படுத்துவது நல்லது. மலிவான அல்லது போலியான கேபிள்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.
அதேபோல் சார்ஜ் செய்யும் போது உங்கள் போன் குளிர்ச்சியாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பழுதடைந்த சாக்கெட்டுகளை மாற்றுங்கள். குவாஜியா நிறுவனம் கொண்டுவந்துள்ள சார்ஜர் பயனுள்ள வகையில் தான் இருக்கிறது. ஆனாலும் நம் பயன்படுத்தும் நவீன ஸ்மார்ட்போன்களுக்கு இது அவசியமானதல்ல. பழைய போன்களுக்கு வேண்டும் என்றால் இது பயனுள்ள வகையில் இருக்கும்.
Image Source : X.COM


Click it and Unblock the Notifications








