புதிய டெல் இன்ஸ்பைரான் 620எஸ் கம்ப்யூட்டர்- சிறப்பு பார்வை

கம்ப்யூட்டர்களுக்கு உலகப்புகழ்பெற்ற நிறுவனத்தின் தயாரிப்பு என்ற கூடுதல் பலத்துடன் மார்க்கெட்டிற்கு வந்திறங்கியுள்ளது டெல் இன்ஸ்பைரான் டெஸ்க்டாப். மினி டவர் மற்றும் ஸ்லிம் டவர்(620எஸ்) ஆகிய இரண்டு மாடல்களில் இந்த புதிய டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை தேர்வு செய்யலாம்.
இது 18.5 இஞ்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் மிருதுவான கீபோர்டில் டெல் கைவண்ணம் தெரிகிறது. சாலிட் ஒயிட், டீப் பர்ப்பிள், பார்மோசா ரெட் மற்றும் பீகாக் புளூ மற்றும் கறுப்பு ஆகிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இடவசதிக்கு தக்கவாறு இதை பக்கவாட்டிலும், நேராகவும் வைத்துக்கொள்ள ஏதுவாக கேபினெட்டில் ரப்பர் புஷ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளுக்கும் ஏற்றவாறு நிரம்ப போர்ட்டுகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. 2 யூஎஸ்பி போர்ட், ஹெட்போன் மற்றும் மைக்ரோபோன் ஜாக், மல்டி கார்டு ரீடர் ஸ்லாட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
சூடாவதை தவிர்க்கும் வகையில் இரண்டு பேன்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பார்ப்பதற்கு சிறிய கேபினெட்டாக இருந்தாலும் உள்பக்கம் அதிக இடவசதியை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, ஹார்டுடிஸ்க் உள்பட அனைத்தும் சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது.கேபினெட்டை எளிதாக திறந்து மூடுவதற்கு ஏதுவாக இரண்டு ஸ்குருக்களை மட்டும் கொண்டுள்ளது.
கிராபிக்ஸ் பிராசஸிங் யூனிட் மற்றும் ரேம் சிப்களும் கூடுதல் வசதிகளை அளிக்கின்றன. இதில், இரண்டாம் தலைமுறை 3.30 ஜிகாஹெர்ட்ஸ் இன்டல்கோர் ஐ-3-2120மி(சாண்டி பிரிட்ஜ்) பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 4ஜிபி மெமரி கொண்ட டிடிஆர்-3 ரேம், ஏஎம்டி ரேடியோன் எச்டி-6450 கிராபிக்ஸ் பிராசஸிங் யூனிட் மற்றும் 1 டிபி ஹார்டு டிஸ்க் டிரைவ் ஆகியவற்றை கொண்டிருக்கிறது.
இந்த புதிய டெல் டெக்ஸ்டாப் விண்டோஸ் 7 ஹோம் எடிசனில் இயங்குகிறது. எம்எஸ்-ஆபிஸ் 2010 ஸ்டார்ட்டர் எடிசன், ஸ்கைப், வைல்டு டேன்ஜென்ட் வீடியோ கேம்ஸ் ஆகியவை அப்லோடு செய்யப்பட்டுள்ளன. ஹைடெபினிஷனில் வீடியோ பார்க்கும் வசதியும் இருக்கிறது.
இதில், எச்டிபிசி கிராபிக்ஸ் கார்டை பொருத்தினால் கூடுதல் துல்லியத்துடன் வீடியோ பார்க்கும் வசதியை பெறலாம். ஆனால், இதன் கேபினுக்குள் எச்டிபிசி கார்டை பொருத்தியவுடன் இடநெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. மேலும், கூடுதல் சாதனங்களை பொருத்தினால் வெப்பம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதால் தவிர்ப்பது நலம்.
இருப்பினும், டெல் நிறுவனத்தின் தரத்துடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வந்துள்ள இந்த டெஸ்க்டாப் ரூ.36,000 விலையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications