ரூ.2,295 விலையில் குழந்தைகளுக்கான கீபோர்டு: கேஸியோ அறிமுகம்

Posted By: Staff

ரூ.2,295 விலையில் குழந்தைகளுக்கான கீபோர்டு: கேஸியோ அறிமுகம்
டெல்லி: இசை பயில துவங்கும் குழந்தைகளுக்கென பிரத்யேக வசதிகள் கொண்ட புதிய மினிகீபோர்டை கேஸியோ அறிமுகம் செய்துள்ளது.

கீபோர்டு தயாரிப்பில் புகழ்வாய்ந்த ஜப்பானை சேர்ந்த கேஸியோ நிறுவனம் எஸ்ஏ-வரிசையில் குழந்தைகளுக்கான மினிகீபோர்டுகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இசை உலகில் அடியெடுத்து வைக்கும் குழந்தைகள், மிக எளிமையாக கற்றுக்கொள்ளும் வகையில் சிறப்பு வசதிகளை இந்த எஸ்ஏ-வரிசை மினி கீபோர்டுகள் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே, எஸ்-46,எஸ்ஏ-47,எஸ்ஏ-76 மற்றும் எஸ்ஏ-77 என்ற குறியீட்டு பெயர்களில் மினி கீபோர்டுகளை கேஸியோ விற்பனை செய்து வருகிறது.

இதே வரிசையில், தற்போது கூடுதல் அம்சங்கள் நிறைந்த எஸ்ஏ-78 என்ற குறியீட்டு பெயரில் புதிய மினி கீபோர்டை சமீபத்தில் கேஸியோ அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான கீபோர்டுகள் மேற்கத்திய இசைக்கருவிகளின் இசை அப்லோடு செய்யப்பட்டிருக்கும். ஆனால், இந்த புதிய மினி கீபோர்டில் இந்திய மார்க்கெட்டுக்கு தகுந்தவாறு ஹார்மோனியம், சந்தூர், சிதார் மற்றும் ஷெனாய் இசைக்கருவிகளின் இசை அப்லோடு செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கு தனித்தனி பட்டன்கள் கொடுக்கப்படிருப்பதால் கீபோர்டு இசையுடன் சேர்த்து இவற்றை ஒலிக்க செய்யலாம்.

இசை பயில துவங்கும் குழந்தைகளுக்கும், இசை ஆர்வலர்களுக்கும் இந்த புதிய மினிகீபோர்டு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 5 இந்திய ராகங்கள், 10 இசை தொகுப்புகள் மற்றும் இரண்டு தபேலா தாளங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சொந்தமாக இசை பயிற்சி செய்யும்போது இவை பின்னணியில் ஒலிக்கும் என்பதால் ஒரு முழுமையான இசை கலவையுடன் தாளம் தப்பாமல் பயிற்சி மேற்கொள்ள முடியும்.

எஸ்ஏ-46 பச்சை வண்ணத்திலும், எஸ்ஏ-76 ஆரஞ்ச் வண்ணத்திலும், எஸ்ஏ-78 இளஞ்சிவுப்பு நிறத்திலும் கிடைக்கிறது. மேலும், இந்த மினி கீபோர்டுகள் ரூ.2,295 முதல் ரூ.2,795 விலையில் முன்னணி இசைக்கருவிகள் விற்பனை மையங்களில் கிடைக்கும் என கேஸியோ தெரிவித்துள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot