போட்டோ உண்மையா, AI வேலையா? நொடியில் கண்டுபிடிக்க Google கொடுத்த SynthID டிடெக்டர்.. எப்படி பயன்படுத்துவது?
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தற்போது, உண்மையான போட்டோ, வீடியோக்கள் போன்றே ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கன்டென்ட்களும் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இதனால், இணையத்தில் பார்க்கும் ஒரு போட்டோ அல்லது வீடியோ உண்மையானதா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிவது பலருக்கும் சவாலாக இருக்கிறது. இதற்கு தீர்வளிக்கும் வகையில் கூகுள் சின்த்ஐடி டிடெக்டர் (SynthID Detector) களமிறங்கி இருக்கிறது.
கூகுள் சின்த்ஐடி டிடெக்டர் என்றால் என்ன?
கூகுள் டீப்மைண்ட் (Google DeepMind) உருவாக்கியுள்ள சின்த்ஐடி என்பது ஏஐ மூலம் உருவாக்கப்படும் கன்டென்ட்களில் கண்ணுக்கு தெரியாத டிஜிட்டல் வாட்டர்மார்க்கை (Digital Watermark) சேர்க்கும் தொழில்நுட்பமாகும். இந்த வாட்டர்மார்க் போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் குறிப்பிட்ட ஏஐ டெக்ஸ்ட் கன்டென்ட்களில் சேர்க்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி அந்த கன்டென்ட் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய முடியும்.

கூகுள் நிறுவனத்தின் தகவலின்படி, சின்த்ஐடி டிடெக்டர் மூலம் ஏஐ கன்டென்ட்களில் சின்த்ஐடி வாட்டர்மார்க் உள்ளதா என்பதை யூசர்களே சரிபார்த்து கொள்ள முடியும். இந்த டிடெக்டர் கூகுளின் ஜெமினி (Gemini) மட்டுமின்றி ஓப்பன்ஏஐ (OpenAI), என்விடியா (NVIDIA), காகோ (Kakao) உள்ளிட்டவற்றிலும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கன்டென்ட்களையும் சரிபார்க்க உதவுகிறது. நீங்கள் குறிப்பிட்ட கன்டென்ட்டில் மட்டுமே இந்த வாட்டர்மார்க் உள்ளதா என்பதையே பார்க்க முடியும்.
AI போட்டோ, வீடியோவை சரிபார்ப்பது எப்படி?
ஸ்டெப் 1: SynthID Detector இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
ஆகவே, உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் பிரவுசரை ஓப்பன் செய்து https://synthid.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். SynthID Detector வசதியை இங்கு பயன்படுத்தலாம். இந்த வசதி உலகளவில் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, பிராந்திய மொழிகளில் எதிர்பார்க்கலாம்.
ஸ்டெப் 2: சரிபார்க்க வேண்டிய கன்டென்ட்டைத் தேர்வு செய்யவும்.
நீங்கள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்று சந்தேகப்படும் போட்டோ, வீடியோ அல்லது ஆடியோ பைலை தேர்வு செய்ய வேண்டும். அந்த ஃபைலை Detector வசதியில் அப்லோட் செய்வதற்கான வழிமுறைகளை பின்பற்றவும். எந்த வகையான ஃபைல், சைஸ் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்பதை இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 3: வாட்டர்மார்க் குறித்த முடிவை பார்க்கவும்.
பைலைச் சரிபார்த்த பிறகு, அதில் SynthID வாட்டர்மார்க் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அதுகுறித்த தகவலை இது வழங்கும். இதன்மூலம் குறிப்பிட்ட கன்டென்ட் கூகுள் அல்லது அதன் ஆதரவு பெறும் ஏஐ தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறதா அல்லது எடிட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
ஸ்டெப் 4: முடிவை எப்படி புரிந்துகொள்வது?
ஒரு போட்டோ அல்லது வீடியோவில் SynthID வாட்டர்மார்க் கண்டறியப்பட்டால், அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட கன்டென்டாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரமாகும். அதேசமயம், வாட்டர்மார்க் கண்டறியப்படவில்லை என்பதற்காக அந்த கன்டென்ட் நிச்சயமாக மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று முடிவு செய்துவிடக்கூடாது.

ஜெமினி மூலம் ஏஐ கன்டென்ட்டை சரிபார்க்க முடியுமா?
SynthID Detector மட்டுமின்றி, கூகுள் ஜெமினி ஆப் மூலமாகவும் குறிப்பிட்ட போட்டோ, வீடியோ அல்லது ஆடியோவை சரிபார்க்க முடியும். இதற்காக ஜெமினி ஆப்பைத் திறந்து, சரிபார்க்க வேண்டிய பைலை அப்லோடு செய்து, அது கூகுள் AI மூலம் உருவாக்கப்பட்டதா அல்லது மாற்றப்பட்டதா என்று கேட்கலாம். ஜெமினி, அந்தக் கன்டென்ட்டில் SynthID வாட்டர்மார்க் உள்ளதா என்பதை சரிபார்க்க உதவும்.
மேலும், கூகுள் சர்ச் மற்றும் குரோம் (Chrome) ஆகியவற்றிலும் ஏஐ கன்டென்ட்களை சரிபார்க்கும் வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்தச் சரிபார்ப்பு குறிப்பிட்ட வாட்டர்மார்க் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால், இணையத்தில் கிடைக்கும் அனைத்து ஏஐ கன்டென்ட்களையும் இது உறுதியாக கண்டறியும் என்று சொல்லிவிட முடியாது.
SynthID-ஐ மறைக்க முடியுமா?
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கன்டென்ட்டில் கண்ணுக்குத் தெரியாத வகையில் இந்த வாட்டர்மார்க் சேர்க்கப்படுகிறது. இது போட்டோ அல்லது வீடியோவின் குவாலிட்டியை பாதிக்காமல் இருக்கும். அதே நேரத்தில் போட்டோவை கிராப் (Crop) செய்வது, பில்டர் (Filter) சேர்ப்பது அல்லது வீடியோவின் ஃபிரேம் ரேட்டை (Frame Rate) மாற்றுவது போன்ற மாற்றங்களுக்கு பிறகும் வாட்டர்மார்க்கை கண்டறிய முடியும்.
ஆடியோவில் மனித காதுகளால் கேட்க முடியாத வகையில் வாட்டர்மார்க் சேர்க்கப்படுகிறது. அதேபோல், ஜெமினி மூலம் உருவாக்கப்படும் குறிப்பிட்ட டெக்ஸ்ட் கன்டென்ட்களிலும் SynthID தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஏஐ கன்டென்ட்களை அடையாளம் காண்பதற்கான கூடுதல் வழியை யூசர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.
ஆகவே,, சோஷியல் மீடியாக்களில் பகிரப்படும் சந்தேகத்திற்குரிய போட்டோக்கள், வீடியோக்கள் அல்லது ஆடியோவை சரிபார்க்க SynthID Detector உதவியாக இருக்கும். இருப்பினும், ஒரு கன்டென்ட்டின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த இந்த முடிவை மட்டுமே நம்பாமல், அதன் மூலத்தையும் நம்பகமான தகவல்களையும் வைத்து முடிவுக்கு வர வேண்டும். ஏஐ மட்டுமே நம்பகமானது கிடையாது.


Click it and Unblock the Notifications
