Gmail யூசர்களுக்கு யோகம்.. Google அறிமுகம் செய்துள்ள Personal Intelligence அம்சம்.. ON பண்ணா போதும்.. இனி?
கூகுள் (Google) நிறுவனமானது இந்தியாவில் உள்ள ஜெமினி ஏஐ (Gemini AI) பயனர்களுக்கான முக்கிய அம்சத்தை அறிமுகம் செய்து உள்ளது. இதன் மூலம் கூகுள் நிறுவனமானது, ஓப்பன்ஏஐ சாட்ஜிபிடி ஏஐ (OpenAI ChatGPT AI) எதிரான தனது அடுத்த நடவடிக்கையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
அதென்ன அம்சம்? கூகுள் நிறுவனமானது ஜெமினிக்கான பர்சனல் இன்டெலிஜென்ஸ் அம்சத்தை (Gemini Personal Intelligence) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம், சூழலுக்கு ஏற்ற பதில்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆப் ஒருங்கிணைப்பு உடன், ஏஐ அசிஸ்டென்ட்டின் திறன்களை இன்னும் விரிவுபடுத்துகிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த அம்சம் - இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது என்ன செய்யும்? பர்சனல் இன்டெலிஜென்ஸ் அம்சத்தின் வழியாக ஜெமினியை தேர்ந்தெடுக்கப்பட்ட கூகுள் ஆப்களுடன் இணைக்க முடியும். இப்படி செய்வதன் வழியாக கிடைக்கும் டேட்டாவை கொண்டு - அது உங்களுடைய கேள்விகளுக்கு மிகவும் துல்லியமான மற்றும் விரிவான பதில்களை வழங்கும். அதாவது பர்சனல் இன்டெலிஜென்ஸ் மூலம், பயனர்கள் ஜெமினியை ஜிமெயில், கூகுள் போட்டோஸ், யூட்யூப் மற்றும் சேர்ச் போன்ற ஆப்களுடன் இணைக்க முடியும்.
இந்த அம்சம் இயக்கப்பட்டவுடன், கூகுளின் ஏஐ அசிஸ்டென்ட் ஆனது, கூகுளின் கீழ் உள்ள மேற்கூறிய சோர்ஸ்களில் இருந்து தகவல்களை பெற்று ஒருங்கிணைத்து, பல ஆப்களில் இருந்து கிடைத்த தரவுகளை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு சரியான மற்றும் இன்னும் துல்லியமான பதில்களை வழங்கும்.
ஆப்ஷனல் மற்றும் டீஃபால்ட் ஆஃப்: கூகுள் நிறுவனத்தின் கூற்றுப்படி, பர்சனல் இன்டெலிஜென்ஸ் அம்சம் விருப்பத்திற்குரியது (Optional) மற்றும் டீபால்ட் ஆகவே அணைக்கப்பட்டும் (Turned off by default) இருக்கும். மேலும் எந்த ஆப்களை இணைப்பது என்பது குறித்த கட்டுப்பாடும் பயனர்களுக்கு வழங்கப்படும்.
ஆன் செய்வது எப்படி? இந்த அம்சத்தை இயக்க விரும்பும் பயனர்கள், ஜெமினி ஆப்பிற்கு சென்று, செட்டிங்ஸ் > பர்சனல் இன்டெலிஜென்ஸ் என்பதற்குள் நுழைந்து, தாங்கள் இணைக்க விரும்பும் ஆப்களை தேர்ந்தெடுக்கலாம். இப்போதைக்கு இந்தியாவில் உள்ள கூகுள் ஏஐ பிளஸ், ப்ரோ மற்றும் அல்ட்ரா சந்தாதாரர்களுக்கு பர்சனல் இன்டெலிஜென்ஸ் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. வரும் வாரங்களில் இது பரவலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பர்சனல் இன்டெலிஜென்ஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்க, ஜெய்ப்பூருக்கு ஒரு பயணத்தை திட்டமிடுவதை கூகுள் நிறுவனம் ஒரு உதாரணமாக வழங்கி உள்ளது. ஒரு பயனர் தனது பயண திட்டங்களை பற்றி ஜெமினியிடம் கேட்டால், அந்த அசிஸ்டென்ட் ஜிமெயிலில் (Gmail) இருந்து முன்பதிவு செய்ததற்கான உறுதிப்படுத்தல்களை பெறும்.
கூடவே போட்டோஸில் இருந்து நோட்ஸ் (Notes) அல்லது சேவ்டு மேப்ஸ் (Saved Maps) போன்ற தொடர்புடைய இமேஜ்களை மீட்டெடுக்கும் மேலும் சமீபத்தில் பார்த்த யூட்யூப் (YouTube) வீடியோக்களின் அடிப்படையில் செல்ல வேண்டிய இடங்களை பரிந்துரைக்கும். மிக முக்கியமாக, இந்த எல்லா விவரங்களும், ஒரே பதிலில் கிடைக்கும்.
கூகுளின் கூற்றுப்படி, பர்சனல் இன்டெலிஜென்ஸ் என்பது பல சோர்ஸ்களில் (multiple sources) இருந்து பகுத்தறிந்து குறிப்பிட்ட விவரங்களை (retrieve specific details) மீட்டெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பதில்களை உருவாக்க இந்த இரண்டு திறன்களையும் ஒருங்கிணைக்கிறது. ஜெமினியால் தகவலின் சோர்ஸ்-ஐ குறிப்பிட முடியும் என்றும், மேலும் தெளிவுபடுத்துவதற்காக பயனர்கள் தொடர் கேள்விகளை கேட்கலாம்.
மேலும் ஆப்களுடன் இணைக்கப்பட்டதன் மூலம் கிடைக்கும் டேட்டாவானது, கேள்விகளுக்கு பதிலளிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும், செயற்கை நுண்ணறிவு மாடல்களுக்கு பயிற்சி அளிக்க நேரடியாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. பயனர்கள் இந்த அம்சத்தை எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம் அல்லது இந்த அம்சத்தின் கீழ் செயல்படாத தற்காலிக உரையாடல்களை நிகழ்த்தலாம் என்றும் கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், பர்சனல் இன்டெலிஜென்ஸ் அம்சமானது இன்னும் வளர்ச்சியில் இருப்பதாகவும், சில சமயங்களில் தவறான அல்லது அதிகப்படியான தனிப்பயனாக்கப்பட்ட பதில்களை வழங்கக்கூடும் என்றும் கூகுள் ஒப்புக்கொண்டது. ஜெமினி ஆனது சூழலை தவறாகப் புரிந்துகொள்ளும் நிகழ்வுகளும் இருக்கலாம், உதாரணமாக இது பயனர்களின் ஆர்வங்களை தவறாக ஊகிக்கலாம்.
இப்படி நடக்கும் பட்சத்தில், ஜெமினி உடனான உரையாடல்களின் போது பயனர்கள் நேரடியாக அதை சரிசெய்து, தம்ப்ஸ்-டவுன் (thumbs-down) விருப்பத்தை பயன்படுத்தி பீட்ஃபேக் வழங்கலாம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது. சேர்ச், ஜிமெயில் மற்றும் குரோம் போன்ற சேவைகளில் ஜெமினியின் செயல்பாட்டை விரிவுபடுத்துவதற்கான, கூகுள் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக - பர்சனல் இன்டெலிஜென்ஸ் அம்சம் இந்தியாவிற்கு வந்துள்ளது!


Click it and Unblock the Notifications








