ChatGPT, Gemini, Grok போன்ற AI-கிட்ட Health Tips கேட்காதீங்க... ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஆரோக்கியம், உடல் நலம் ஆகிய விஷயங்களுக்காக ஏஐ (AI) என்கிற ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸை பயன்படுத்துவது குறித்து பல விவாதங்கள் நடந்து வரும் நிலையில், பிஎம்ஜே ஓப்பன் (BMJ Open) என்கிற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, பிரபலமான ஏஐ சாட்பாட்ஸ் (AI chatbots) வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் பாதிக்கு பாதி தவறானவை என்று கண்டறிந்துள்ளது.
ப்ளூம்பெர்க் (Bloomberg) வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, மேற்குறிப்பிட்ட ஆய்வு ஆனது, ஜெனெரேட்டிவ் ஏஐ தளங்களுடன் (Generative AI platforms) தொடர்புடைய, அதிகரித்து வரும் சுகாதார அபாயங்களை (Health risks) எடுத்துக்காட்ட, ஐந்து முக்கிய செயற்கை நுண்ணறிவு தளங்களை மதிப்பீடு செய்துள்ளது.

இந்த ஆய்வு என்ன கண்டறிந்தது? இந்த ஆய்வு, சாட்ஜிபபிடி (ChatGPT), ஜெமினி (Gemini), மெட்டா ஏஐ (Meta AI), க்ரோக் (Grok) மற்றும் டீப்சீக் (DeepSeek) ஆகியவற்றை சோதித்து, ஒவ்வொரு சாட்பாட் ஏஐ-யிடமும் ஐந்து சுகாதார பிரிவுகளில் தலா 10 கேள்விகளை கேட்டது. அப்படியாக உருவாக்கப்பட்ட மொத்த பதில்களில், 50 சதவீதம் சிக்கலான மருத்துவ தகவல்களை கொண்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
மேலும், ஏஐ சாட்பாட்களால் உருவாக்கப்பட்ட பதில்களில் கிட்டத்தட்ட 20 சதவீதம் மிகவும் சிக்கலானவை என வகைப்படுத்தப்பட்டதாகவும் இந்த ஆய்வு குறிப்பிட்டது. அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் மற்றும் தடுப்பூசிகள் போன்ற நிறுவப்பட்ட மருத்துவ தலைப்புகள் தொடர்பான க்ளோஸ்டு-எண்டட் கேள்விகளை கையாளும்போது ஏஐ மாடல்கள் ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்பட்டன என்பதையும் கண்டறிந்தனர்.
இருப்பினும், ஓப்பன்-எண்டட் கேள்விகள் அல்லது ஊட்டச்சத்து மற்றும் தண்டு செல்கள் போன்ற சிக்கலான சுகாதார தலைப்புகளுக்கு பாதுகாப்பான பதில்களை வழங்குவதில் இந்த ஏஐ மாடல்கள் சிரமப்பட்டுள்ளன. மருத்துவ தீர்ப்பு வழங்கும் திறனோ அல்லது மருத்துவ நோயறிதல்களை வழங்குவதற்கான உரிமங்களோ இல்லாதபோதிலும் கூட, இந்த ஏஐ மாடல்கள் கையாளும் "அதிகாரப்பூர்வமான தொனியே" (எல்லாம் தெரிந்தது போல் பதில் சொல்வது) இந்த ஆய்வின் மிக முக்கியமான கவலைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தங்கள் கூற்றுகளை ஆதரிப்பதற்கு முழுமையான மற்றும் துல்லியமான மருத்துவ ஆதாரங்களின் பட்டியலை வழங்க முடியாத நிலையிலும்கூட, இந்த ஏஐ சாட்பாட் ஆப்கள் ஆனது சுகாதார கேள்விகளுக்கு நம்பிக்கையுடனும் உறுதியுடனும் பதிலளித்ததாக இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. மேலும் மெட்டா ஏஐ ஆனது கேட்கப்பட்ட 10 கேள்விகளில் 2 கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
முறையான மேற்பார்வை மற்றும் பொது விழிப்புணர்வு இல்லாமல் இந்த சாட்பாட்களை பயன்படுத்துவதில் உள்ள ஒரு பெரிய ஆபத்து, அவை தவறான தகவல்களின் பரவலை அதிகரிக்க வழிவகுக்கும் என்று இந்த ஆய்வின் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக தோன்றலா. ஆனால் குறைபாடுகள் இருக்கக்கூடிய பதில்களை உருவாக்க கூடியவைகள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அந்த அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளனர்
ஏஐ சாட்பாட்கள் தொடர்பான இந்த கண்டுபிடிப்புகள் ஆனது - முக்கியமான நடத்தை சார்ந்த வரம்புகளையும், பொதுமக்களுக்கான சுகாதாரம் மற்றும் மருத்துவ தகவல்தொடர்புகளில் ஏஐ சாட்பாட்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை மறுமதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
சுகாதார துறையில் தங்கள் ஏஐ டூல்களுக்கு ஒரு பெரிய பங்களிப்பை வழங்குவதற்காக, ஏஐ நிறுவனங்கள் கடுமையாக பணியாற்றி வரும் நேரத்தில் இந்த புதிய ஆய்வு வெளிவந்துள்ளது. ஓப்பன்ஏஐ (OpenAI) இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது சாட்ஜிபிடி ஹெல்த் (ChatGPT Health) சேவையை அறிமுகப்படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது பயனர்கள் தங்கள் தனிப்பட்ட சுகாதார தரவுகளை பிரபலமான ஏஐ சாட்பாட்டுடன் பகிர்ந்து, மேலும் உறுதியான முடிவுகளை பெற அனுமதிக்கிறது.
இதற்கிடையில், ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனமும் கிளாட் ஃபார் ஹெல்த்கேர் (Claude for Healthcare) சேவையை அறிமுகப்படுத்தி இருந்தது. இது அமெரிக்காவில் உள்ள அதன் கட்டண பயனர்கள் தங்கள் மருத்துவ பதிவுகளை கூட பாதுகாப்பாக இணைக்க அனுமதிக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








