WhatsApp வெப்பில் களமிறங்க தயாராகும் அடுத்த சேவை இது தான்.. கண்டிப்பா யூஸ்ஃபுள் தான்..
வாட்ஸ்அப் நிறுவனம் தற்பொழுது அதன் வாட்ஸ்அப் வெப் தளத்தில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்வதற்காகச் சோதனை செய்து வருகிறது. பிரபலமான சாட்டிங் பயன்பாட்டிற்கான வெப் பதிப்பில் விரைவில் வாட்ஸ்அப் வாய்ஸ் காலிங் மற்றும் வீடியோ காலிங் அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை WABetaInfo தற்பொழுது ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.

WABetaInfo வெளியிட்ட தகவல்
வாட்ஸ்அப் வெப் வெர்ஷன் 2.2043.7 அப்டேட் குறித்து WABetaInfo சமீபத்தில் ஆய்வு செய்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் அப்டேட் டிராக்கராக செயல்பட்டு வரும் WABetaInfo, இந்த அம்சம் இன்னும் வளர்ச்சியில் உள்ளது என்றும், சோதனையில் இயக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

குரூப் வாய்ஸ் காலிங் மற்றும் வீடியோ காலிங் அம்சம்
WABetaInfo-வை பொறுத்தவரை, குரூப் வாய்ஸ் காலிங் மற்றும் வீடியோ காலிங் அம்சம் சோதிக்கப்பட்டு வளர்ச்சியில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.இந்த ஆண்டில் ஏராளமான ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதால், பெரும்பாலான மக்கள் தங்கள் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

இனி இந்த கவலை வேண்டாம்
இதனால் ஒவ்வொரு முறையும் தங்களுக்கு அழைப்பு வரும்போது அவர்களின் ஸ்மார்ட்போன்களை தேடி எடுத்து பதில் அளிக்கின்றனர். இனி அந்த கவலையை நீக்க, வாட்ஸ்அப் தற்பொழுது இந்த அம்சத்தை வெப் தளத்தில் சோதனை செய்கிறது.

வாய்ஸ் மற்றும் வீடியோ கால் பாப்-அப் நோட்டிபிகேஷன்
வாட்ஸ்அப் பயனர்கள் வெப் தளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பொழுது அழைப்புகள் வந்தால், அது அழைப்பை ஏற்க அல்லது நிராகரிக்கும் விருப்பங்களுடன் ஒரு பாப்-அப் நோட்டிபிகேஷனை டெஸ்க்டாப் திரையில் காண்பிக்கிறது. அதேபோல், நீங்கள் ஒருவருக்கு வாட்ஸ்அப் வெப் மூலம் அழைக்கும் போது, ஒரு சிறிய கால் ஸ்டேட்டஸ் நோட்டிபிகேஷன் பாக்ஸ் திரையில் காண்பிக்கப்படுகிறது.

விரைவில் வாட்ஸ்அப் வெப் கைரேகை அங்கீகாரம்
இந்த புதிய அம்சம் எப்பொழுது அனைவருக்கும் கிடைக்கப்பெறும் என்பது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. இதன் சோதனையில் எதிர்பாராத தாமதங்கள் எதுவும் இல்லை என்றால், வரும் சில வாரங்களில் இந்த அம்சம் வெளிவரக்கூடும் என்று WABetaInfo கணித்துள்ளது. அதேபோல், மற்றொரு சமீபத்திய WABetaInfo அறிக்கை, வாட்ஸ்அப் வெப் விரைவில் கைரேகை அங்கீகாரத்தைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications