WhatsApp-க்கு வந்த ரூ.250 சந்தா.. 20 சாட் லிமிட், க்ரீன் கலருக்கு குட்பை.. இனி எது FREE, எதெல்லாம் கட்டணம்?
மெட்டா (Meta) நிறுவனமானது பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் ஆன வாட்ஸ்அப்பில் 'வாட்ஸ்அப் பிளஸ்' (WhatsApp Plus) என்ற புதிய கட்டண சேவையை சோதிக்க தொடங்கியுள்ளது. WABetaInfo வழியாக கிடைத்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்த அம்சம் தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு அணுக கிடைக்கிறது.
விரைவில் இது பரவலாக வெளியிடப்படும் என்றும், ஆப்பிள் பயனர்களுக்கான ஐஓஎஸ் ஆதரவும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மெட்டா நிறுவனம் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் கட்டண அம்சங்களை சோதிக்க தொடங்கியுள்ளது, இப்போது வாட்ஸ்அப்பும் அதே பாதையை பின்பற்றுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் "வாட்ஸ்அப் பிளஸ்" அறிமுகப்படுத்தப்படும் விதத்தில்தான் முக்கிய வேறுபாடு உள்ளது: பயனர்கள் ஏற்கனவே இலவசமாக பெறும் அம்சங்களை மாற்றுவதற்கு பதிலாக, வாட்ஸ்அப் பிளஸ் ஆனது ஏற்கனவே உள்ள அம்சங்களுக்கு மேலான கூடுதல் மற்றும் பிரீமியம் அம்சங்களை கொண்டு வருகிறது. அப்படியாக வாட்ஸ்அப் பிளஸின் முக்கிய பிரீமியம் அம்சங்களின் பட்டியல் இதோ:
1. பிரீமியம் ஸ்டிக்கர்கள்: புதிய ஸ்டிக்கர் பேக்குகள், அவற்றில் சில ஃபுல் ஸ்க்ரீனில் அனிமேஷன் செய்யப்பட்ட எபெக்ட்களை கொண்டுள்ளன, இவற்றை கட்டண சந்தாவில் சேராத சந்தாதாரர்களும் காண முடியும்.
2. தீம் கஸ்டமைசேஷன்: வாட்ஸ்அப்பின் டீபால்ட் க்ரீன் கலருக்கு பதிலாக, இன்டர்பேஸ் முழுவதும் பயன்படுத்தக்கூடிய 18 முக்கிய வண்ணங்களின் தொகுப்பு.
3. ஆல்டர்நேட் ஆப் ஐகான்கள்: நேர்த்தியான எளிமையான தோற்றங்கள் முதல் அதிக ஸ்டைலான, அமைப்புடன் கூடிய விருப்பங்கள் வரை 14 ஐகான் ஸ்டைல்கள்.
4. அடிஷனல் பின்டு சாட்கள்: சாட்களை பின் செய்வதற்கான வரம்பு 3 இலிருந்து 20 ஆக உயர்கிறது, இது பல சாட்களை கையாளும் பயனர்களுக்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
5. கூடுதல் ரிங்டோன்கள்: அழைப்புகள் மற்றும் அறிவிப்புகளுக்கான பிரத்யேக டோன்களின் ஒரு சிறிய தொகுப்பு.
6. பல்க் சாட் கண்ட்ரோல்கள்: ஒரே நேரத்தில் பல எண்ணிக்கையிலான சாட்களுக்கான தீம்கள் மற்றும் அறிவிப்பு செட்டிங்ஸ்களை கையாளலாம்.
மேற்கண்ட எந்த அம்சங்களும் வாட்ஸ்அப்பில் மெசேஜிங் செயல்பாடுகள் நடக்கும் விதத்தை மாற்றுவதில்லை. ஆப்பின் தோற்றம் மற்றும் அதன் மீது பயனர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு ஆகியவற்றின் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறது. பயனர்களின் கருத்துக்களின் அடிப்படையில் மேலும் பல அம்சங்களை சேர்க்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது; ஆக காலப்போக்கில் இந்த சேவை இன்னும் மேம்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
வாட்ஸ்அப் பிளஸ் சந்தாவின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை: முன்னரே குறிப்பிட்டபடி தற்போது வரையிலாக, வாட்ஸ்அப் பிளஸ் ஆனது ஒரு சிறிய ஆண்ட்ராய்டு பீட்டா டெஸ்ட்டர்கள் குழுவிற்கு மட்டுமே கிடைக்கிறது. விலை பிராந்தியத்தை பொறுத்து மாறுபடும்; மாதத்திற்கு சுமார் USD 2.99 (சுமார் ரூ.250) என்ற குறைந்த கட்டணம் இருக்கும் என ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரிவிக்கின்றன.
இது தானாகப் புதுப்பிக்கப்படும் ஒரு நிலையான சந்தா மாதிரியைப் பின்பற்றுகிறது. பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம், மேலும் சிலர் சந்தா செலுத்துவதற்கு முன் அம்சங்களை முயற்சித்துப் பார்க்க ஒரு இலவச சோதனையைப் பெறலாம். இந்தச் சோதனைக் கட்டம் எவ்வாறு செல்கிறது என்பதைப் பொறுத்து பரவலான வெளியீடு அமையும். iOS ஆதரவு திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் அதற்கான காலக்கெடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எதெல்லாம் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் இலவசமாகவே இருக்கும்? வாட்ஸ்அப்பின் முக்கிய அனுபவத்தில் எந்த மாற்றமும் இருக்காது. மெசேஜ்கள், வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள், மற்றும் ஸ்டேட்டஸ் அப்டேட்கள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும். எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷனும் அப்படியே தொடர்கிறது, எனவே ப்ரைவஸி ஒரு சமரசமாக இருக்காது.
OPINION - வாட்ஸ்அப் பிளஸ் ஆனது - அடிப்படை அம்சங்களை முடக்காமல் விருப்ப தேர்வுக்குரிய கூடுதல் அம்சங்களை வழங்கும் டெலிகிராமின் பிரீமியம் திட்டத்தை போலவே உள்ளது. பெரும்பாலான பயனர்களுக்கு, இந்த இலவச பதிப்பே அன்றாட தேவைகளை திறம்பட பூர்த்தி செய்கிறது. குறிப்பாக, இதே போன்ற முக்கிய (வழக்கமாக வாட்ஸ்அப்பில் கிடைக்கும்) அம்சங்களை எந்த கட்டணமும் இன்றி வழங்கும் சிக்னல் போன்ற மாற்று ஆப்களுடன் ஒப்பிடும்போது இது (வாட்ஸ்அப்) சிறப்பாகவே உள்ளது.
விரிவான கஸ்டமைசேஷனை விரும்புபவர்களுக்கு இந்த சந்தா முறை முதன்மையாக பயன்படலாம்; இல்லையெனில், ஆப் ஸ்டோர்களில் உள்ள இலவச கஸ்டமைஸ் விருப்பங்களை தேர்வு செய்வதன் மூலமும், தொடர்ச்சியான கட்டணங்கள் இன்றி இதே போன்ற ரிசல்ட்களை அடைய முடியும். இருப்பினும், பல சாட்களை நிர்வகிக்கும் பயனர்கள், வாட்ஸ்அப் பிளஸ் வழியாக கிடைக்கும் விரிவாக்கப்பட்ட பின்னிங் மற்றும் மொத்தமாக பயன்படுத்தும் டூல்களால் நிச்சயம் பயனடையலாம்!


Click it and Unblock the Notifications








