Meta அடுத்த மூவ்.. மொபைல் ரீசார்ஜ் போல WhatsApp-க்கு வந்த 2 திட்டங்கள்.. ஒன்னு ரூ.700.. இன்னொன்னு ரூ.2200!
மெட்டா (Meta) நிறுவனம் கடந்த மாதம் பேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) ஆகியவற்றிற்கான சந்தா திட்டங்களை (subscription plans) அறிவித்து இருந்தது. இதற்கிடையில் தற்போது மெட்டா ஒன் (Meta One) என்பதன் கீழ் கட்டண திட்டங்கள் சோதிக்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, வாட்ஸ்அப் தனது ஆண்ட்ராய்டு (Android) ஆப்பில் மெட்டா ஒன் சந்தா திட்டங்களுக்கான ஆதரவை சேர்க்க தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், பயனர்கள் ஒரே சந்தா கட்டணத்தின் வாயிலாக மெட்டாவின் பல்வேறு ஆப்களில் உள்ள பிரீமியம் (Premium) அம்சங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும் இந்த தகவலின்படி, பயனர்கள் வாட்ஸ்அப்பிற்கு உள்ளேயே நேரடியாக இந்த சந்தா திட்டத்தை பெறும் வசதியையும் வாட்ஸ்அப் உருவாக்கக்கூடும். மெட்டா ஒன் சேவையின் கீழ் மெட்டா ஒன் பிளஸ் (Meta One Plus) மற்றும் மெட்டா ஒன் பிரீமியம் (Meta One Premium) ஆகிய இரண்டு வகையான சந்தா திட்டங்களை மெட்டா நிறுவனம் வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மெட்டா ஒன் பிளஸ் மற்றும் மெட்டா ஒன் பிரீமியம் சந்தாக்களின் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள்: WABetaInfo வழியாக கிடைத்துள்ள தகவலின்படி, இந்த மெசேஜிங் பிளாட்பார்ம்தனது ஆண்ட்ராய்டு ஆப்பில் மெட்டா ஒன் சந்தா திட்டங்களை நேரடியாக சேர்க்கத் தயாராகி வருகிறது. ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.26.23.10-ல் இரண்டு புதிய மெட்டா ஒன் சந்தா திட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த அப்டேட் மூலம், பயனர்கள் வாட்ஸ்அப்பிற்கு உள்ளேயே நேரடியாக திட்டங்களை பெறவும், நிர்வகிக்கவும் முடியும் என்று கூறப்படுகிறது. இத்திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் பதிவு செய்யும் பயனர்களுக்கு வாட்ஸ்அப் பிளஸ் (WhatsApp Plus) நன்மைகள் அந்த தொகுப்பின் ஒரு பகுதியாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது; அத்துடன் ஒரே சந்தா மூலம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் மெட்டா ஏஐ (Meta AI) ஆகியவற்றின் பிரீமியம் அம்சங்களையும் அவர்கள் பயன்படுத்தலாம்.
WABetaInfo பகிர்ந்துகொண்ட ஸ்கிரீன்ஷாட்களின்படி, மெட்டா ஒன் பிளஸ் மற்றும் மெட்டா ஒன் பிரீமியம் ஆகிய இரண்டு சந்தா நிலைகள் (tiers) இருக்கும். இவை நிறுவனத்தின் கட்டண திட்டங்களின் ஒரு பகுதியாக கூடுதல் அம்சங்களை வழங்கும். மெட்டா ஒன் பிளஸ் திட்டத்தின் விலை மாதத்திற்கு EUR 6.99 (தோராயமாக ரூ.700) ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் வாட்ஸ்அப் பிளஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட இமேஜ் மற்றும் வீடியோ ஜெனரேஷன் டூல்களுக்கான அணுகல் ஆகியவையும் அடங்கும்.
மெட்டா ஒன் பிரீமியம் திட்டத்தின் விலை மாதத்திற்கு EUR 20.99 (தோராயமாக ரூ.2,200) ஆக இருக்கும் என்றும், இதில் ஒரு மாத இலவச சோதனைக் காலமும் (free trial) இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மெட்டா ஒன் பிளஸ் வழங்கும் அனைத்து அம்சங்களுக்கும் மேலாக, இத்திட்டம் சிக்கலான ப்ராம்ப்ட்களுக்கு (prompts) மேம்பட்ட பகுத்தறிவு திறன், அதிக அளவிலான இமேஜ் மற்றும் வீடியோ ஜெனெரேட்டிங் வசதி மற்றும் அதிகப்படியான ஏஐ பயன்பாட்டு வரம்புகள் ஆகியவற்றை வழங்குகிறது.
இந்த இரண்டு திட்டங்களிலும் வாட்ஸ்அப் பிளஸ் வசதி கிடைக்கலாம். வாட்ஸ்அப் பிளஸ் ஆனது பயனர்களுக்குப் புதிய ஆப் தீம்கள் (app themes) மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ரிங்டோன்களை (custom ringtones) வழங்கக்கூடும். மேலும், கூடுதல் 'பின்' (pinned) செய்யப்பட்ட சாட்கள், லிஸ்ட்டை தனிப்பயனாக்கும் வசதி, பிரீமியம் ஸ்டிக்கர்கள் போன்ற பல அம்சங்களையும் இது வழங்கலாம்.
மெட்டா நிறுவனம் கடந்த மாதம் பேஸ்புக் பிளஸ் (Facebook Plus), இன்ஸ்டாகிராம் பிளஸ் (Instagram Plus) மற்றும் வாட்ஸ்அப் பிளஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. சந்தாதாரர்களுக்கு பிரத்யேக அம்சங்கள் மற்றும் மேம்பட்ட ஏஐ திறன்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டங்கள், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications