சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ சுற்றளவில் வசிப்பவர்களுக்கு இப்படியொரு வசதியா? இனி இந்த செயலி போதும்.. இதோ விவரம்!
இந்தியாவில் கடந்த சில மாதங்களில் சுங்கக் கட்டணம் தொடர்பான பல மாற்றங்களும், புதிய விதிமுறைகளும் (New Toll Rule) அமலுக்கு வந்துள்ளன. அதுவும் சாலைப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையிலும், வாகன ஓட்டிகள் சந்திக்கும் சிரமங்களைக் குறைக்கவும் அரசு தரப்பில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுங்கச் சாவடியிலிருந்து 20 கி.மீ. சுற்றளவிற்குள் வசிக்கும் மக்கள் ராஜ்மார்க் யாத்ரா (Rajmarg Yatra) மொபைல் செயலி மூலம் உள்ளூர் பாஸை இனி எளிதாக எண்ம (டிஜிட்டல்) முறையில் பெற்றுக்கொள்ளலாம் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

முன்பு சுங்கச்சாவடியைச் சுற்றியுள்ள 20 கி.மீ. எல்லைக்குள் வசிக்கும் வாகன ஓட்டிகள், உள்ளூர் பாஸ் பெற நேரடியாக சுங்கச்சாவடிக்குச் சென்று தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் நடைமுறையால், 'ராஜ்மார்க் யாத்ரா' செயலி வழியாக சில நிமிடங்களிலேயே உள்ளூர் பாஸை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதுகுறித்து என்ஹெச்ஏஐ (NHAI) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ராஜ்மார்க் யாத்ரா மொபைல் செயலி மூலம் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிக்கு நேரில் செல்லாமலே, உள்ளூர் பாஸைப் பெற்றுக் கொள்ள முடியும். முதல்கட்டமாக, தில்லியில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாகன ஓட்டிகளின் முகவரி, வாகனப் பதிவு எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஃபாஸ்டேக் விவரங்களை தானாகவே பெறும் வகையில், ஒப்புதல் அடிப்படையில் 'டிஜிலாக்கர்' மற்றும் 'வாஹன்' உள்ளிட்ட மத்திய அரசின் எண்ம தளங்களுடன் இந்த ராஜ்மார்க் யாத்ரா செயலி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர் உண்மையில் சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ. சுற்றளவிற்குள் வசிக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த, புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் துல்லியமான மற்றும் வெளிப்படையான சரிபார்ப்பு நடைமுறையும் மேற்கொள்ளப்படுகிறது.
இதுதவிர வாகன ஓட்டிகளுக்கு தேவையான தகவல்கள், சேவைகள் மற்றும் குறைதீர்ப்பு வசதிகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில், 'மார்க்மித்ரா' என்ற புதிய உதவி மையமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் தளத்தின் மூலம், பயனர்கள் 22 இந்திய மொழிகளில் வழிகாட்டுதல்களைப் பெறுவதோடு, தங்களது குறைகளையும் பதிவு செய்ய முடியும்
மேலும், ஃபாஸ்டேக் புதுப்பித்தல், கேஒய்சி (KYC) சேவைகள், வருடாந்திர மற்றும் உள்ளூர் பாஸ் தொடர்பான தகவல்கள், சுங்கக் கட்டணம் மற்றும் பிற சேவைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கங்களையும் 'மார்க்மித்ரா' தளத்தின் மூலம் பெறலாம் என என்ஹெச்ஏஐ தெரிவித்துள்ளது.
அதேபோல் இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்காமல், உடனுக்குடன் சுங்கக் கட்டணத்தைச் செலுத்த ஃபாஸ்டேக் (FASTag) பெரிதும் பயன்படுகிறது. முன்பு சுங்கச்சாவடிகளை நாம் கடந்து செல்லும்போது வானத்தை நிறுத்தி பணமாகச் செலுத்தி மீதமுள்ள தொகை வாங்கி செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதுவும் இதனால் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்திருக்க வேண்டி நிலைமையும் உண்டானது.

வார இறுதி நாட்கள் மற்றும் முக்கியமான பண்டிகை நாட்களில் சுங்கச்சாவடிகளிலேயே பல மணி நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அதன்பிறகு ஃபாஸ்டேக் நடைமுறைக்கு வந்த பிறகு இது முற்றிலுமாக மாறிவிட்டது. சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய அனைத்து வாகனங்களில் ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டு இருந்து. இது வாகன உரிமையாளரின் வங்கி கணக்கோடு தொடர்பு படுத்தப்பட்டிருக்கும்.
சுங்கச்சாவடி கடந்து செல்லும்போது தானாகவே ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்டு சுங்க கட்டணம் வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். இந்த ஃபாஸ்டேக் வசதி வந்தது முதல் இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பது பெருமளவு குறைந்து இருக்கிறது. இதன்மூலம் எரிபொருளும், நேரமும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்பது தான் உண்மை.


Click it and Unblock the Notifications