ஆதார் இருக்கா.. இனி புதிய Aadhaar ஆப் போதும்.. பயனர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய வசதிகள்!
இந்தியர்களின் மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது ஆதார் அட்டை. அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களைப் பெறுவதிலிருந்து தொடங்கி, புதிய சிம் கார்டு வாங்குவது, முதலீடுகள் செய்வது, வங்கி கணக்கு திறப்பது போன்ற பல முக்கிய செயல்பாடுகளிலும் ஆதார் அட்டை அவசியமாகிறது. இன்று பெரும்பாலான சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகளில், ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் முதன்மை ஆவணமாக ஆதார் அட்டையே பயன்படுத்தப்படுகிறது.
ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்துவதால், அதில் உள்ள அனைத்து தகவல்களையும் எப்போதும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். இல்லையெனில், அரசின் சில நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். குறிப்பாக, உங்கள் மொபைல் எண் மாறினாலோ அல்லது வீடு மாறினால் அந்த புதிய முகவரி விவரங்களை உடனடியாக ஆதார் பதிவில் புதுப்பித்துவிடுவது நல்லது. இதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்க்க முடியும்.

வழக்கமாக, ஆதார் தொடர்பான சேவைகள் மற்றும் தகவல்களைப் பெற இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) அதிகாரப்பூர்வமான mAadhaar செயலியை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த செயலி மூலம் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது, தனிப்பட்ட விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது, Virtual ID (VID) உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை எளிதாக அணுக முடிந்தது. இதனால், ஆதார் தொடர்பான பணிகளை அலுவலகங்களுக்குச் செல்லாமல், நேரடியாக மொபைல் மூலமே மேற்கொள்ளும் வசதி பயனர்களுக்குக் கிடைத்தது.
இதற்கிடையில், பழைய mAadhaar செயலியை விரைவில் நிறுத்த உள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது. இதற்குப் பதிலாக, மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய Aadhaar செயலியை அனைத்து பயனர்களும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய செயலி மூலம் ஆதார் சேவைகளை இன்னும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் அணுக முடியும் எனவும் UIDAI தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய Aadhaar செயலி, பழைய mAadhaar செயலிக்கான மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி, பயனர்களின் தனியுரிமை மற்றும் தகவல் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பதற்கான பல்வேறு சிறப்பு வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளதால், பயனர்கள் தங்களது தகவல்களை எளிதாகவும் பாதுகாப்பாகவும் நிர்வகிக்க முடியும் என்று UIDAI தெரிவித்துள்ளது. சரி இப்போது ஆதார் செயலியில் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
1.பயனர்கள் அதிகம் எதிர்பார்த்த அம்சங்களில் ஒன்றான தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பகிர்வு (Selective Data Sharing) புதிய Aadhaar செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது சரிபார்ப்புகளின் போது உங்களது முழு ஆதார் விவரங்களையும் தராமல் தேவைப்படும் குறிப்பிட்ட விவரங்களை மட்டும் தேர்ந்தெடுத்துப் பகிரலாம் (Data Minimisation). இதன் மூலம் உங்கள் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்.
2.உங்களது ஆதார் விவரங்கள் எங்கு எப்போது சரிபார்க்கப்பட்டன (Authentication History) என்ற வரலாற்றைக் கண்காணிக்கும் வசதி இந்த செயலியில் உள்ளது.
3. இந்த செயலியில் உள்ள QR தொடர்பு அட்டை (QR Contact Card), உங்களின் தொடர்பு விவரங்களை எளிதாகப் பகிர்வதற்கு இந்த வசதி உதவும்.
4.புதிய Aadhaar செயலியில் வழங்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் லாக்/அன்லாக் (Biometric Lock/Unlock) வசதி மூலம், பயனர்கள் தங்களின் கைரேகை மற்றும் விழித்திரை தொடர்பான பயோமெட்ரிக் தகவல்களை ஒரே கிளிக்கில் எளிதாக பூட்டவோ அல்லது தேவையான போது திறக்கவோ முடியும். இந்த அம்சம், ஆதார் தரவுகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், அனுமதியற்ற பயன்பாட்டைத் தடுக்கவும் உதவுகிறது.

5.புதிய Aadhaar செயலியின் மூலம் முகவரி மாற்றம் போன்ற சேவைகளுடன் சேர்த்து, உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணையும் எளிதாக புதுப்பித்துக் கொள்ள முடியும்.
6. குறிப்பாக நகல் (Physical copy) எடுப்பதைத் தவிர்க்க, QR கோடு மூலம் எளிதாக அடையாளத்தை உறுதிப்படுத்தலாம்.
7.ஒரு குடும்பத்தில் உள்ள ஐந்து பேரின் ஆதார் விவரங்களை ஒரே ஆதார் செயலியில் நிர்வகிக்கலாம்.


Click it and Unblock the Notifications