WhatsApp Username அம்சத்தில் அப்படி என்ன பிரச்சனை? இந்திய அரசாங்கமே அலறுவது ஏன்? Telegram, Signal சிக்கலில்!
வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனமானது, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 'யூசர் நேம்ஸ்' (Usernames) அம்சத்தை அறிவித்து. இந்த அம்சம் - பயனர்கள் தங்கள் மொபைல் நம்பர்களை பகிராமல், மற்றவர்களை தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. இதன் அறிமுகம் இன்னும் ஆரம்பக் கட்டத்தில் இருந்தாலும், இந்த அம்சம் இந்திய அரசாங்கத்தின் ஆய்வுக்கு உட்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு அறிக்கையின்படி, இது ஆன்லைன் மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்ட முயற்சிகளை கண்டறிவதை மேலும் கடினமாக்கும் என்று அதிகாரிகள் அஞ்சுகிறார்கள். மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தளமானது, ஆலோசனைகள் முடியும் வரை இந்தியாவில் "யூசர் நேம்ஸ்" (WhatsApp Username) அம்சத்தை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் வாட்ஸ்அப்பை தொடர்ந்து, யூசர் நேம்ஸ் தொடர்பாக டெலிகிராம் (Telegram), சிக்னல் (Signal) ஆகியவற்றும் கூட மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நினைவூட்டும் வண்ணம் டெலிகிராமில் ஏற்கனவே யூசர் நேம் வசதி உள்ளது. சிக்னலை பொறுத்தவரை, இந்த வசதி உள்ளது, ஆனால் இது விருப்பத்திற்கு (Optional) உரியது.
யூசர் நேம் குறித்து வாட்ஸ்அப் என்ன சொல்கிறது? வாட்ஸ்அப் நிறுவனமானது பயனர்கள் "ஆப்பில் அவர்கள் எவ்வாறு தோன்றுகிறார்கள்" (How they show up in the app) என்பது குறித்த கூடுதல் ப்ரைவஸி ஆப்ஷன்களை வழங்குவதற்கான "சமீபத்திய நடவடிக்கை" (Latest step) தான் இந்த யூஸர் நேம்ஸ் என்று சந்தைப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப்பை பொறுத்தவரை இது ஒரு கூடுதல் தனியுரிமை அடுக்கு ( additional privacy layer) ஆகும். இதன் கீழ் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களை ஒரு தனித்துவமான பயனர் பெயர் குறியீட்டை (unique username key) அமைக்க அனுமதிக்கிறது. இதன் மூலம், அவர்களை யாரெல்லாம் தொடர்பு கொள்ளலாம் என்பதில், பயனர்களுக்கு அதிக கட்டுப்பாடு கிடைக்கும் என்று வாட்ஸ்அப் நம்புகிறது
ஆனால் இந்திய அரசாங்கம் என்ன சொல்கிறது? ஒரு அரசாங்க கடிதத்தை மேற்கோள் காட்டி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), இந்த அம்சம் தொடர்பாக ஏன் ஒழுங்குமுறை நடவடிக்கை தொடங்கக்கூடாது என்பதற்கு மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு வாட்ஸ்அப்பிற்கு உத்தரவிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஃபிஷிங் தாக்குதல்கள், டிஜிட்டல் கைது மோசடிகள், நிதி மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் ஆகியவற்றை இது எளிதாக்கக்கூடும் என மத்திய அரசு கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. வங்கிகள், அரசு நிறுவனங்கள் அல்லது பிரபலங்களின் பெயர்களை போன்ற யூஸர் நேம்கள், பயனர்களை ஏமாற்ற தவறாக பயன்படுத்தப்படலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த விளக்கத்தை கோரியதுடன், இந்த புதிய வசதியை வெளியிடும் நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறும் வாட்ஸ்அப்பிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் கவலைகளுக்கு பதிலளித்த வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் ஒருவர், யூசர் நேம் வசதி இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் அவர் "வாட்ஸ்அப்பில் தங்களுக்கு விருப்பமான யூசர் நேமை முன்பதிவு செய்வதற்கான வசதியை மட்டுமே நாங்கள் அறிவித்துள்ளோம். யூசர் நேமை பயன்படுத்தும் வசதி இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை; இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் படிப்படியாக வெளியிடப்படும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த அம்சத்தின் கீழ் - மற்றொருவரின் அடையாளத்தை போல தங்களை காட்டிக்கொள்ளும் (impersonation) அபாயத்தை குறைக்கப் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. பொது பிரமுகர்கள், அரசு நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட மெட்டா அக்கவுண்ட்களுக்கான யூசர் நேம்களை அந்நிறுவனம் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளது. அத்தகைய பெயர்களை போன்ற தோற்றமளிக்கும் பெயர்கள் பதிவு செய்யப்படுவதும் தடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
ஆக இனிமேல் வாட்ஸ்அப்பிற்கு மொபைல் நம்பர் தேவைப்படாதா? அப்படி இல்லை. யூசர் நேம் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை உருவாக்கவும், பயன்படுத்தவும் பயனர்களுக்கு மொபைல் நம்பர் தேவைப்படும் என்பதை வாட்ஸ்அப் வலியுறுத்தியது. "மற்ற பயனர்கள் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப, உங்கள் சரியான பயனர் பெயரை தெரிந்து வைத்திருக்க வேண்டும்," என்று கூறிய வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர், அடையாள திருட்டு மற்றும் தவறான பயன்பாட்டு முறைகளை கண்டறிந்து அவற்றை நீக்குவதற்கான அமைப்புகள் வாட்ஸ்அப்பிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications