ஆன்லைனில் லைக், ஷேர் செய்தால் பணம் சம்பாதிக்கலாம்.. விளம்பரம் நல்லாருக்கு ஆனால் விபரீதமும் இருக்கே..
வளர்ந்து வரும் நவீன உலகத்தில் டிஜிட்டல் மோசடி என்பது பெருகிக்கொண்டே வருகிறது, இதிலிருந்து நம்மை எப்படி காத்துக்கொள்வது என்று இன்னும் பலருக்கும் சரியாய் தெரியவில்லை. போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் மக்கள் புது-புது ஆன்லைன் சிக்கல்களில் சிக்கி தங்களின் பணத்தை இழக்கின்றனர். அப்படியான ஒரு மோசடி பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.

'மீ சேர்' மற்றும் 'லைக் சேர்' ஆப்ஸ்
'மீ சேர்' மற்றும் 'லைக் சேர்' என்ற பெயரில் வெளியாகியுள்ள ஆப்ஸ் மூலம் ஒரு கும்பல் பெரியளவில் ஆன்லைன் மோசடியை செய்து வருவது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த ஆப்ஸ் 'கூகிள் பிளே ஸ்டோர்' மூலம் பதிவிறக்கம் செய்யக் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மக்கள் இதைத் தேடி சென்று பதிவிறக்கம் செய்ய கரணம் என்ன தெரியுமா? ஏனெனில், இந்த ஆப்ஸ் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.

ஆப்ஸ் மூலம் ஆன்லைனில் பணம்
ஆப்ஸ் மூலம் ஆன்லைனில் பணம் கிடைக்கிறது என்றால் நாம் சும்மாவா இருப்போம், அது எப்படி? நாம் என்ன செய்ய வேண்டும்? இதோ உடனே நாமும் இதை டிரை செய்து பணம் சம்பாதித்துப் பார்க்கலாம் என்று உங்களுக்கும் எண்ணம் எழுந்திருக்கும். அதற்கு முன்பு, முதலில் இந்த ஆப்ஸ் எதற்காக உங்களுக்குப் பணம் வழங்குகிறது என்று தெரிந்துகொண்டால், அடுத்து உங்களுக்கு இதில் இருக்கும் ஆபத்துகளைப் புரிந்துகொள்வது சுலபமானதாக இருக்கும்.

யூடியூப் மற்றும் பேஸ்புக் பதிவுக்கு லைக் ஷேர்
இந்த இரண்டு ஆப்ஸ்களும் நீங்கள் யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற பதிவுகளை லைக் செய்து, ஷேர் செய்து, சப்ஸ்கிரைப் செய்யும் ஒவ்வொரு பதிவிற்கும் ஏற்ப உங்களுக்குப் பணம் கொடுக்குகிறது. கேட்கவே சுலபமாக இருக்கிறதே, டிரை செய்யலாம் என்று உங்களுக்குள் ஒரு ஆசை கிளம்பியிருக்கும். இந்த ஆசையைக் கிளப்பிவிடுவது தான் மோசடி கும்பலின் முதல் முக்கிய நோக்கமே, அதை மறக்காதீர்கள். ஈசியாக சம்பாதிக்கலாம் என்பது எல்லாம் சுத்த பொய்.

3 யூடியூப், ஃபேஸ்புக் வீடியோக்களுக்கு 8 ரூபாய் சம்பளம்
இன்னும் உங்கள் ஆசையை கிளப்பிவிட்ட, இந்த கும்பல் கொடுத்திருக்கும் விளம்பரத்தை பார்த்தால் உடனே நீங்கள் இந்த ஆப்ஸை டவுன்லோட் செய்துவிடுவீர்கள். மீ சேர் ஆப்ஸில் இலவசமாக 3 யூடியூப், ஃபேஸ்புக் வீடியோக்களுக்கு லைக் செய்து சப்ஸ்கிரைப் செய்தால், ஒரு லைக் மற்றும் சப்ஸ்கிரைப்பிற்கு 8 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று இந்த மோசடி கும்பல் விளம்பரம் செய்கிறது. இப்படி வரும் பணத்தைச் சேமித்து வைக்க ஒரு தனி வாலெட் அம்சம், ஆப்ஸ் உடன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒவ்வொரு விதமான சம்பளம்
இப்படி நீங்கள் சம்பாதிக்க இவர்கள் பலவிதமான பிரிவுகளை வைத்துள்ளனர். ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒவ்வொரு விதமான பதிவுகள் வீடியோக்கள் உங்களுக்கு லைக் மற்றும் ஷேர் செய்ய கிடைக்கும். ஒவ்வொரு பிரிவிற்கு ஏற்றார் போல நீங்கள் பெரும் பண மதிப்பு மாறும். இதில் சேர 1000 ரூபாய் முதல் 60,000 வரை நீங்கள் பணம் செலுத்திச் சம்பாதிக்க வேண்டும். அவ்வாறு செலுத்தி திட்டத்தில் சேர்ந்தால், ஒவ்வொரு திட்டத்திலும் உள்ள வீடியோக்களை லைக் மற்றும் சப்ஸ்கிரைப் செய்தால் பணம் கொடுக்கப்படும்.

மாதம் 54 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
ஒரு வீடியோவிற்கு 8 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். குறிப்பாக 'கிங்' என்ற திட்டத்தில் சேர்ந்தால் ஒரு நாளைக்கு 100 வீடியோக்களை லைக் மற்றும் சப்ஸ்கிரைப் செய்து, ஒவ்வொரு லைக்கிற்கும் சுமார் 18 ரூபாய் சம்பாதிக்கலாம். அதன்படி ஒரு நாளைக்கு ஆயிரத்து 800 ரூபாயும், மாதம் 54 ஆயிரம் ரூபாய் வரையிலும் சம்பாதிக்கலாம் என இந்த மோசடி கும்பல் விளம்பரம் செய்துள்ளது.

பணத்தையும் அபேஸ் செய்யும் கும்பல்
இப்படி உங்கள் ஆசையை கிளப்பிவிட்டு, சில திட்டங்களில் உங்களை பணம் செலுத்த வைத்து, அவர்கள் விரித்த வலையில் உங்களை மாட்டவைத்து ஏமாற்றுவார்கள். முதல் இரண்டு, மூன்று நாட்களில் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் உங்கள் ஆப்ஸ் செயலிழந்துவிடும். இதற்குப் பின் நீங்கள் கட்டிய தொகையையும் அபேஸ் செய்வதோடு, நீங்கள் மூன்று நாட்கள் ஆசையாய் சம்பாதித்த பணத்தையும் அபேஸ் செய்கிறது அக்கும்பல்.

சென்னையை சேர்ந்த கும்பலா?
இந்த ஆப்பை பயன்படுத்தி தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பேர் ஏமாந்துள்ளதாகத் தெரிகிறது. ஏமாந்தவர்களின் பணம் அனைத்தும் சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் வங்கியில் உள்ள ஒரு கணக்கிற்குச் சென்றது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலீசார் தீவிர விசாரணை
போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இப்படி உங்கள் ஆசையை கிளப்பிவிடும் ஆன்லைன் கும்பலிடம் சிக்காமல் இருங்கள். இதுபற்றி தெரியாதவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications