Apple Pay என்ட்ரி.. ஆனால், UPI பேமெண்ட்டில் லேட்-என்ட்ரி.. Google Pay-க்கு கேக் வாக்.. என்னென்ன இருக்கு?
இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் மார்கெட் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மளிகைக் கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை எங்கும் க்யூஆர் (QR) கோடுகளை ஸ்கேன் செய்து UPI மூலம் பணம் செலுத்துவது நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது.
இந்தச் சூழலில், பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் பே (Apple Pay) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கி இருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் கூகுள் பே (Google Pay) ஆப்புக்கும் புதிதாக வந்துள்ள ஆப்பிள் பே ஆப்புக்கும் என்ன வித்தியாசம்? கிரெடிட் கார்டு மற்றும் யுபிஐ (UPI) பேமெண்ட்களில் எது சிறந்தது? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.

யுபிஐ பேமெண்ட்டின் முடிசூடா மன்னன்
இந்தியாவில் கூகுள் பே என்பது வெறும் பணப்பரிமாற்ற ஆப்பாக மட்டுமல்ல, டிஜிட்டல் பேமெண்ட் (Digital Payment) டெக்னாலஜியுடன் இரண்டற கலந்த ஒரு சேவையாக மாறிவிட்டது. எந்த ஒரு பேங்க் அக்கவுண்ட்டையும் லிங்க் செய்து, நொடிப்பொழுதில் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்புவது கூகுள் பே ஆப் சாத்தியமாகும்.
சமீபத்தில் கூகுள் பே ஆப்பில் ரூபே கிரெடிட் கார்டுகளை (RuPay Credit Cards) நேரடியாக யுபிஐ பேமெண்ட்டுடன் இணைக்கும் வசதி கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், பேங்க் அக்கவுண்ட்டில் பணம் இல்லாவிட்டாலும், உங்களிடம் உள்ள ரூபே கிரெடிட் கார்டு மூலமாகவே எந்தவொரு கடைக்காரரின் கியூஆர் கோடையும் (QR Code) ஸ்கேன் செய்து பணம் செலுத்த முடியும்.
இது இந்திய கஸ்டமர்களுக்கு மிகப் பெரிய வசதியாக பார்க்கப்படுகிறது. மேலும், என்எப்சி (NFC) வசதி கொண்ட ஸ்மார்ட்போன்ளில் விசா/மாஸ்டர் கார்டுகளை இணைத்து டேப் டு பே (Tap to Pay) முறையிலும் பணத்தை அனுப்பி கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், ஆப்பிள் போன்களில் கூட கூகுள் பே வந்துவிட்டது. அவ்வளவு பரவலாக உருவெடுத்துள்ளது.

பாதுகாப்பான காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்
நீண்ட காத்திருப்புக்கு பிறகு இந்தியாவில் கால் பதித்துள்ள ஆப்பிள் பே, கூகுள் பேவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சேவையாக இயங்குகிறது. அறிமுகத்தின் தொடக்கமாக, ஆக்சிஸ் பேங்க் விசா (Axis Bank Visa) மற்றும் மாஸ்டர்கார்டு கிரெடிட் கார்டுகளுக்கு (Mastercard Credit Card) மட்டுமே ஆப்பிள் பே தற்போது சப்போர்ட் கொடுத்து இருக்கிறது.
முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆப்பிள் பேவில் தற்போது இந்தியாவில் யுபிஐ பேமெண்ட் வசதி கொடுக்கப்படவில்லை. ஆப்பிள் பே என்பது வழக்கமாக ஆப்பிள் பிரியர்களுக்கு சொல்லப்படும் ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் வாலெட் (Digital Wallet) சேவை போலவே களமிறங்கி இருக்கிறது. பிசிக்கல் கிரெடிட் கார்டை ஐபோனில் டிஜிட்டலாக இணைத்து கொள்ள முடியும்.
கடைகளுக்கு செல்லும்போது கார்டை பர்ஸில் இருந்து எடுக்க தேவையில்லை. என்எப்சி வசதி உள்ள ஸ்வைப் மிஷின்களில் உங்கள் ஐபோன் அல்லது ஆப்பிள் வாட்ச் காண்பித்து, பேஸ் ஐடி (Face ID) அல்லது டச் ஐடி (Touch ID) மூலம் பாதுகாப்பாக பணம் செலுத்தலாம். இது டோக்கனைசேஷன் (Tokenization) முறையை பயன்படுத்துவதால், கார்டு விவரங்கள் யாருக்கும் பகிரப்படாது.
கிரெடிட் கார்டு பயன்பாட்டில் உள்ள வித்தியாசம்
ஜிபே (GPay): ரூபே கிரெடிட் கார்டுகளை நேரடியாக யுபிஐ ஐடியில் இணைக்கலாம். பொட்டி கடை டீ கடைகளில் உள்ள சாதாரண ஸ்டிக்கர் கியூஆர் கோடுகளை கூட ஸ்கேன் செய்து உங்கள் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம். மொபைல் நம்பர், யுபிஐ ஐடி இருந்தாலும்போதும் பணத்தை அனுப்பலாம்.
ஆப்பிள் பே (Apple Pay): விசா மற்றும் மாஸ்டர்கார்டுகளை (தற்போது ஆக்சிஸ் பேங்க் மட்டும்) ஆப்பிள் வாலெட்டில் சேமிக்கலாம். ஆனால் எந்த எந்த கியூஆர் கோடையும் ஸ்கேன் செய்ய முடியாது. பெரிய கடைகளில் உள்ள பிஓஎஸ் (POS) மிஷின்களில் என்எப்சி மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும்.
| அம்சங்கள் | கூகுள் பே | ஆப்பிள் பே |
| பேமெண்ட் டெக் | யுபிஐ & என்எப்சி | என்எப்சி மட்டும் |
| கிரெடிட் கார்டு சப்போர்ட் | ரூபோ (யுபிஐ மூலம்), விசா/மாஸ்டர் (என்எப்சி) | விசா, மாஸ்டர்கார்டு (தற்போது ஆக்சிஸ் பேங்க்) |
| கியூஆர் ஸ்கேன் | இருக்கிறது | தற்போது இல்லை |
| பாதுகாப்பு | பிங்கர்பிரிண்ட், பின் நம்பர் | பேஸ் ஐடி / டச் ஐடி |
| பயன்பாடு | கியூஆர் ஸ்கேன் உள்பட பொட்டி கடைகள் முதல் பெரிய மால்கள் வரை | என்எப்சி பிஓஎஸ் மெஷின்கள் உள்ள கடைகளில் மட்டும் |
| டிவைஸ், ஓஎஸ் | ஆண்ட்ராய்டு, ஐபோன், ஸ்மார்ட்வாட்ச் உள்பட | ஆப்பிள் வாட்ச் உள்பட ஐபோன் (iOS 18) டிவைஸ்கள் |
எது சிறந்தது?
நீங்கள் அன்றாடம் காய்கறி கடை, ஆட்டோ முதல் பெரிய கடைகள் வரை கியூஆர் கோடு மூலம் பேமெண்ட் செய்யும் நபராக இருந்தால், உங்களுக்கு கூகுள் பே சிறந்த தேர்வாக இருக்கும். அதிலும் ரூபே கிரெடிட் கார்டை யுபிஐயில் பயன்படுத்தி ரிவார்டுகளை பெறுவது தற்போது இந்திய சந்தையில் ட்ரெண்டாக உள்ளது.
ஆனால், நீங்கள் ஒரு ஐபோன் யூசராக இருந்து, மிகுந்த பாதுகாப்பான மற்றும் பிரீமியமான டேப் டு பே போன்ற காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்டை பெரிய மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் பயன்படுத்த விரும்பினால், ஆப்பிள் பே உங்களுக்கு ஒரு அட்டகாசமான அனுபவத்தை கொடுக்கும்.
இதில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. எப்போதும் போல எலைட் வர்க்கத்துக்கு ஏற்ப ஆப்பிள் பே செயல்பட இருக்கிறது. இருப்பினும், கூகுள் பே எலைட் மட்டுமல்லாமல், வெகுஜன மக்களுக்கும் பொருத்தமாக இருக்கிறது. வரும் காலங்களில் ஆப்பிள் பேவில் யுபிஐ பேமெண்ட்கள் இணைக்கப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications
