இந்தியாவில் ஆப்பிள் பே அறிமுகம்.. எப்படி பயன்படுத்துவது.. UPI-யில் இருந்து எப்படி வேறுபடுகிறது?
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் பே சேவை தற்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் அமெரிக்காவில் அறிமுகமாகி சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவை இந்தியாவுக்கு வந்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் ஆப்பிள் சேவை ஆக்சிஸ் வங்கி உடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, வங்கியால் வழங்கப்பட்ட தகுதியான விசா (Visa) மற்றும் மாஸ்டர்கார்டு கிரெடிட் (Mastercard) கார்டுகளை Apple Pay-யில் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.

பயனர்கள் தங்களது கிரெடிட் கார்டுகளை ஆப்பிள் வால்ட் (Apple Wallet)-ல் இணைத்து, ஆப்பிள் பே வசதி உள்ள contactless payment terminal-களில் பணம் செலுத்தலாம். இயந்திரத்தைத் தொடாமல் கட்டணம் செலுத்தும் முறைக்கு contactless payment - தொடர்பு இல்லாத கட்டணம் என்று பெயர்.
அதுவும் ஆப்ஸ் மற்றும் ஆன்லைன் தளங்களில் பொருட்கள் வாங்கும்போதும் ஆப்பிள் பே பயன்படுத்த முடியும். பயனர்களின் கார்டு எண்கள் Apple நிறுவனத்தின் சர்வர்களில் சேமிக்கப்படாது என்றும், வணிகர்களுடன் பகிரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் இந்த வசதி கிடைக்கிறது. விரைவில் Mac சாதனங்களிலும் ஆப்பிள் பே வசதி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் பே என்றால் என்ன? யுபிஐ-ல் இருந்து எப்படி வேறுபடுகிறது?
ஆப்பிள் பே என்பது டிஜிட்டல் வாலட் மற்றும் காண்டாக்ட்லெஸ் பேமண்ட் (contactless payment) சேவையாகும். இதன் மூலம் கையில் வைத்திருக்கும் கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல், ஆப்பிள் சாதனங்களின் உதவியுடன் கடைகளில் பணம் செலுத்தலாம். இந்தியாவில், தகுதியான Axis Bank Visa மற்றும் Mastercard கிரெடிட் கார்டுகளை ஆப்பிள் வால்ட்-ல் இணைத்து, என்எப்சி வசதிகொண்ட PoS இயந்திரங்களில் காண்டாக்ட்லெஸ் (contactless) முறையில் பணம் செலுத்த முடியும். அதேபோல், ஆப்ஸ் மற்றும் ஆன்லைன் தளங்களில் பொருட்கள் வாங்கும்போதும் ஆப்பிள் பே வசதியை பயன்படுத்தலாம்.
ஆப்பிள் பே மற்றும் யுபிஐ இரண்டும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகள் என்றாலும், அவை செயல்படும் விதம் வேறுபட்டது. இந்தியாவில் ஆப்பிள் பே மூலம் தற்போது தகுதியான வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுகளை ஆப்பிள் சாதனத்தில் இணைத்து, NFC வசதி கொண்ட கடைகளில் tap செய்து பணம் செலுத்தலாம். ஆனால் யுபிஐ மூலம் நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்து யுபிஐ ஐடி, மொபைல் ஆப் அல்லது QR கோடு வழியாக பணம் செலுத்த முடியும். எளிமையாகச் சொன்னால், ஆப்பிள் பே என்பது ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தி கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி, யுபிஐ என்பது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் அனுப்பும் வசதி.
இந்தியாவில் ஆப்பிள் பே வசதியை பயன்படுத்துவது எப்படி?
இந்தியாவில் ஆப்பிள் பே பயன்படுத்த, தகுதியான ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டை ஆப்பிள் வாலட்-ல் இரண்டு வழிகளில் எளிதாகச் சேர்க்கலாம்.
1.ஆக்சிஸ் வங்கி செயலியைத் திறந்து, அதில் கொடுக்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் விசா (Visa) மற்றும் மாஸ்டர்கார்டு கிரெடிட் (Mastercard) ஆப்பிள் வாலட்-இல் எளிதாகச் சேர்க்கலாம்.
2. இரண்டாவது வழி என்னவென்றால், உங்கள் ஐபோனில் உள்ள வாலட் (Wallet) செயலியைத் திறக்கவும். அதில் உள்ள '+' குறியீட்டைக் கிளிக் செய்யவும். இப்போது தகுதியான ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளிட்டுச் சேர்க்கவும்.
நீங்கள் வங்கி கார்டை ஆப்பிள் வாலட்-ல் சேர்த்த பிறகு என்எப்சி (NFC) வசதி கொண்ட PoS இயந்திரம் அருகே உங்கள் ஐபோன் அல்லது ஆப்பிள் வாட்ச்-ஐ வைத்துப் பணம் செலுத்தலாம். மேலும் ஆப்பிள் பே வசதி இருக்கும் ஆப்ஸ் மற்றும் ஆன்லைன் தளங்களில் பொருட்கள் வாங்கும்போதும் இதைப் பயன்படுத்தலாம்.

பாதுகாப்பு அம்சங்கள்
அப்பிள் பே-ல் பயனர்களின் உண்மையான கார்டு எண் சாதனத்திலோ அல்லது ஆப்பிள் நிறுவனத்தின் சர்வர்களிலோ சேமிக்கப்படாது என்றும், வணிகர்களுடன் பகிரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, ஒவ்வொரு சாதனத்திற்கும் தனிப்பட்ட டிவைஸ் அக்கவுண்ட் நம்பர்(Device Account Number) உருவாக்கப்பட்டு, அது குறியாக்கம் செய்யப்பட்ட நிலையில் Secure Element எனப்படும் சாதனத்தின் பாதுகாப்பான சிப்பில் சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் பணப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
ஆப்பிள் பே மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் தகவல்கள் சேமித்து வைக்கப்படாது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பணப்பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் பயனர், வணிகர் மற்றும் கார்டை வழங்கிய வங்கி ஆகியோருக்கு இடையே மட்டுமே இருக்கும். கடைகளில் ஆப்பிள் பே மூலம் பணம் செலுத்த என்எப்சி (NFC) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், காண்டாக்ட்லெஸ் பேமண்ட் (contactless payment) வசதி உள்ள PoS இயந்திரங்களில் மட்டுமே tap செய்து பணம் செலுத்த முடியும்.


Click it and Unblock the Notifications
