குறைந்த செலவில் விவசாய மண்ணின் தரத்தைப் பரிசோதிக்கும் மொபைல் போன் செயலி.!

  இந்திய விவசயாத்துறை, நவீனத் தொழில் நுட்பங்களுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொண்டு வந்தாலும் அந்த மாற்றங்கள் முழுமையாக அனைத்து விவசாயிகளையும் சென்று சேரவில்லை. குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பல்வேறு வகையான சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.

  விவசாயிகள் சந்தித்துவரும் தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல்களுள் ஒன்று மண்பரிசோதனை செய்தல். மண் பரிசோதனைத் தொழில் நுட்பம் சார்ந்த சிக்கலுக்கு எளிமையான தீர்வுடன் களத்தில் குதித்திருக்கின்றனர் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரைச் சேர்ந்த மாயூா் தாம்பே மற்றும் ஷ்ரத்தா பாக்வி ஆகிய இருவரும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  டிஜிடல் இம்பாக்ட் ஸ்கொயர் (DISQ)

  டாடா கன்சல்டன்சி ஃபவுண்டேசன் உதவியுடன் டிஜிடல் இம்பாக்ட் ஸ்கொயர் (DISQ) என்னும் நிறுவனம், நாசிக் நகரில் நடத்திய தொழில் நுட்பப் பயிற்சி அரங்கில் பங்கேற்ற போது மாயூா் தாம்பே மற்றும் ஷ்ரத்தா பாக்வி ஆகிய இருவரும் சந்தித்துக் கொண்டனர். அங்கு ஏற்பட்ட ஆய்வுத் தூண்டுதலின் அடிப்படையில் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பத்தில் ஏதாவது ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டும் என இருவரும் உறுதியேற்றனர். 23 வயதுப் பெண்ணான ஷ்ரத்தா பாக்வி உயிர்த் தொழில் நுட்பவியலில் பட்டம் பெற்றவர். மாயூா் தாம்பே பொறியியல் தொழில் நுட்பவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். இருவருடைய தொழில் நுட்ப அறிவும், இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்துறைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கின்ற சமூகவுணர்வும் இணைந்து நமக்கு ஒரு புதிய கண்டுபிடிப்பைத் தந்திருக்கிறது. மொபைல் போன் செயலியின் வழியாக மண் பரிசோதைனை செய்கின்ற தொழில் நுட்பம்தான் அது.

  கிராமத் தொழில் முனைவோரும் புதிய கண்டுபிடிப்பும்

  கிராமத்தில் உள்ள தொழில் முனைவோர் மூலமாக இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் விரைவாகவும், மிகத் துல்லியமாகவும் மண் பரிசோதனை செய்வதற்கேற்ற ஒரு கண்டுபிடிப்பைத் தருவதுதான் எங்களுடைய முதன்மையான நோக்கமாக இருந்தது என்கின்றனர் இருவரும்.

  குறைந்த செலவில்

  "இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தொழில் முனைவோரும் இச்சேவையைப் பயன்படுத்தி மண் பரிசோதனை செய்வதற்கு ஏற்ப, எளிதில் கிடைக்கக் கூடியவகையில், எளிதாகப் பயன்படுத்தும் வகையில், மிகக் குறைந்த செலவில் நம்பகத் தன்மை வாய்ந்த துல்லியமான முடிவுகளைத் தரக்கூடிய வகையிலும் எங்களுடைய கண்டுபடிப்பு அமைய வேண்டும் என முடிவு செய்து உழைத்தோம், டிஜிடல் இம்பாக்ட் ஸ்கொயர் (DISQ) நிறுவனத்தின் ஒத்துழைப்போடு எங்களுடைய கனவு இப்பொழுது சாத்தியமாகி இருக்கிறது என்கின்றனர்" இப்புதிய கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர்களாகிய மாயூா் தாம்பே மற்றும் ஷ்ரத்தா பாக்வி ஆகிய இருவரும்.

  மண்ணின் தன்மைக்கேற்ப விளைச்சல்

  நிலத்தில் உள்ள மண்ணின் தரத்தைப் பொறுத்துதான் விவசாயத்தின் வெற்றி அமையும். மண்ணின் தன்மையைப் பொறுத்துதான் என்ன விளையும்? எவ்வளவு விளையும் ? என்பதை முடிவு செய்ய இயலும். மண்ணின் தன்மைக்கும் தரத்திற்கும் ஏற்பத் தேவையான நுண்ணூட்டச் சத்துக்களை (essential nutrients) சேர்த்தால் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற்று ஒவ்வொரு விவசாயப் பெருமகனும் மகிழ்ச்சியில் திளைக்க முடியும். இதற்கு ஒவ்வொரு விவசாயியும் தங்கள் நிலத்தில் உள்ள மண்ணைப் பரிசோதனை செய்வது அவசியம்.

  தேவையும் பற்றாக்குறையும்

  வேளாண்மை நிலத்தின் மண்ணைப் பரிசோதிப்பதற்காக இந்தியா முழுவதும் பல பரிசோதனை நிலையங்கள் செயல்படுகின்றன. இப் பரிசோதனைக் கூடங்களில் நவீன கருவிகளும், திறன்மிக்க மண் பரிசோதகர்களும் இருந்தாலும் அவை இந்திய விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இல்லை என்பதுதான் உண்மை. இப்பரிசோதனை நிலையங்களில் மண் பரிசோதனை செய்து முடிவுகளைப் பெறுவதற்குக் கால தாமதம் ஆகின்றது. மேலும் கிடைக்கப் பெறும் முடிவுகள் துல்லியமாக அமைவதும் இல்லை. தோராயமான முடிவுகளைப் பெற வேண்டிய சூழல் உள்ளது. இத்தகைய சிக்கல்களின் காரணமாக பெரும்பாலான விவசாயிகள், தங்கள் நிலத்தில் உள்ள மண்ணின் தன்மையைப் பரிசோதிக்க முன்வருவதில்லை. இவற்றுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில், மண் பரிசோதைனைக்கான மொபைல் போன் செயலியைக் கண்டுபிடித்துள்ளனர் மாயூா் தாம்பே மற்றும் ஷ்ரத்தா பாக்வி ஆகிய இருவரும். மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில், ஃபார்ம்ஸ் (Farmss) என்னும் நிறுவனத்தைத் தொடங்கி இவர்கள் இருவரும் நடத்தி வருகின்றனர். சிறு விவசாய நிலங்களின் மண் வளம் குறித்து ஆய்வு செய்து அந்நிலத்திற்கேற்ற நுண்ணூட்டங்களைப் பரிந்துரை செய்வதுதான் இந்நிறுவனத்தின் முக்கியப் பணி.

  மூன்று கட்ட சோதனை

  இவர்களுடைய கண்டுபிடிப்பின் அடிப்படையில், மூன்று கட்ட சோதனையின் மூலமாக மண்ணின் தன்மையைப் பரிசோதிக்க முடியும். முதலாவதாக சோதனைக்கு உட்படுத்தப்படும் விவசாய நிலத்தில் உள்ள மண்ணை ஒரு சிறு பையில் சேகரித்து அதனை நன்றாகக் கட்டி வைக்க வேண்டும். பிறகு, அந்த விவசாய நிலத்தின் உரிமையாளரின் பெயர், முகவரி, மொபைல் எண், விவசாய நிலத்தின் அமைவிடம், நிலத்தின் பரப்பளவு, நிலத்தில் ஏற்கனவே விளைவிக்கப்பட்டுள்ள பயிர் ஆகியவற்றை மொபைல் போன் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.

  பரிசோதிக்க ஃபார்ம்ஸ் கிட் (Farmss Kit)

  இரண்டாவதாக, சேகரிக்கப்பட்ட மண்ணை விவசாய உற்பத்தியாளர் அமைப்பு அமைந்துள்ள (Farmers producers Organization - FPO ) கிராமத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இங்கு ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் கருவிகளின் மூலமாக மண்ணைப் பரிசோதிக்க வேண்டும். இக்கருவியில் ஒரு வேதிப்பொருள் நிறஅளவைக் கருவி (chemical colorimetric ) உள்ளது. இது சோதனைக்கு உட்படுத்தப்படும் மண்ணில் உள்ள ஊட்டச் சத்துக்களை உறிஞ்சி அதனை நிறச் சோனைக்கு உள்ளாக்குகிறது. மண்ணில் ஏற்படும் நிறமாற்றத்தைப் பொறுத்து இதில் உள்ள உயிர்ச்சத்துக்களின் தன்மை அளவிடப்படுகிறது. நேரடியாக களத்திற்குச் சென்று ஆய்வு செய்யும் பொழுது, மண்ணின் நிறத்தை மிகத் துல்லியமாக கண்டறிய முடியாது. ஆனால் இக்குறைபாட்டை மொபைல் போனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இச்செயலி போக்குகிறது. இச்செயலியின் மூலம், மண்ணின் நிறம் மிகத் துல்லியமாகக் கண்டறியப்படுகிறது.

  மண்ணுக்கேற்ற பரிந்துரைகள்

  இறுதியாக, மண்ணில் உள்ள ஊட்டச் சத்துக்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அம்மண்ணுக்கு எவ்வகையான உரங்கள் தேவைப்படுகின்றன என்பதை மொபைல் போன் செயலி முடிவு செய்கின்றது. மண் பரிசோதனைச் செயலியும், மண் சேகரிப்புச் செயலியும் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளதால் இச்செயல்பாடுகள் விரைவாக நடைபெறுகின்றன. மண் பரிசோதனை அடிப்படையில் கிடைக்கப்பெற்ற தகவல்களும் முடிவுகளும் உடனடியாக நில உரிமையாளரின் மொபைல் போனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நிலத்தில் உள்ள மண்ணின் நுண்ணூட்டச் சத்துக்கள் தொடர்பான தகவல்களும் அதனை மேம்படுத்தத் தேவைப்படும் உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்கள் தொடர்பான விவரங்களும் கிடைக்கப் பெற்றால் அதற்கேற்ற வகையில் நிலத்தின் உரிமையாளர் தன்னுடைய நிலத்தைப் பண்படுத்தி விளைச்சலைப் பெருக்க முடியும்.

  கண்டுபிடிப்பின் மக்கியத்துவம்

  இந்தியாவில் உள்ள மொத்த விவசாயிகளில் (ஏறக்குறைய 11 கோடிப் பேர்) சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் 80 சதவிகிதம் பேர் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒன்பது கோடியாகும். இவர்களின் எண்ணிக்கையோடு நாட்டில் உள்ள மண் பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டால் 2.09 இலட்ச விவசாயிகளுக்கு ஒரு பரிசோனைக் கூடம் என்னும் விகிதத்தில் அமையும். இவைகளின் மூலமாக ஆண்டு ஒன்றுக்கு 3000 மண் பரிசோதனைகளைச் செய்ய இயலும். ஆக, இந்தியாவில் மண் சோதனைக்கான ஆய்வுக்கூடப் பற்றாக்குறை உள்ளதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிலையில்தான், மொபைல் போன் செயலி வழியாக மிக எளிதாக, விரைவாக, துல்லியமாக மண் பரிசோதனை செய்யக் கூடிய வகையில் வந்துள்ள இக்கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

  How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
   50 ரூபாயிலிருந்து 100 ரூபாய்

  50 ரூபாயிலிருந்து 100 ரூபாய்

  ஆய்வுகள் முடிந்து சான்றிதழுக்காகக் காத்திருக்கும் இக்கண்டுபிடிப்பு மக்களின் பயன்பாட்டுக்காக வரும்பொழுது, மண்ணைப் பரிசோதித்துத் தகுந்த பரிந்துரைகளைப் பெறுவதற்கு ஒரு சோதனைக்கு 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரைதான் செலவாகும் என்பதுதான் இக்கண்டுபிடிப்பின் கூடுதல் சிறப்பு.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  A simple phone attachment can now solve a critical problem for Indian farmers ; Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more