ரேஷன் அட்டைதாரர்களே கவனம்.. ஜூலை 31 கடைசி நாள்.. கட்டாயம் இதை செய்யுங்கள்.. ஏன்?
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேஷன் கார்டு (Ration Card) குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்ந்து மானிய விலையில் கிடைக்க வேண்டும் என்றால் ரேஷன் அட்டைதாரர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் இ-கேஒய்சி (e-KYC) முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதுதொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இதுவரை ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவை மேற்கொள்ளாத அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும், வரும் 31-ஆம் தேதிக்குள் தங்களது பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைக்கு நேரில் சென்று கைவிரல் ரேகையைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும், போலி குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து முறைகேடுகளைத் தடுக்கவும், கைரேகை பதிவு மூலம் இ-கேஒய்சி (e-KYC) நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது அருகிலுள்ள ரேஷன் கடையில் நேரில் சென்று கைரேகை பதிவைக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் பதிவு செய்யாமல் இருந்தால், ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால், அனைவரும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கைரேகை பதிவைச் செய்ய வேண்டும்.
முதலில், உங்கள் ரேஷன் கார்டுக்கு இ-கேஒய்சி (e-KYC) நடைமுறை நிலுவையில் உள்ளதா என்பதை அறிய, சம்பந்தப்பட்ட ரேஷன் கடையைத் தொடர்புகொண்டு அல்லது நேரில் சென்று உறுதி செய்து கொள்ளுங்கள். நிலுவையில் இருப்பது தெரியவந்தால், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் உடனடியாக கைரேகை பதிவை மேற்கொள்ள வேண்டும். இதை தாமதப்படுத்தினால், எதிர்காலத்தில் ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதுடன், ரேஷன் கார்டு தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதேபோல் பணி நிமித்தமாகச் சொந்த ஊரை விட்டு வேறு பகுதியில் வசித்து வருபவர்களும் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் தற்போது வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள எந்த நியாயவிலைக் கடையிலும் சென்று கைரேகை பதிவை மேற்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைவரும் எளிதாக கேஒய்சி பதிவை நிறைவு செய்ய முடியும்.
குறிப்பாக குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உயிரிழந்த உறுப்பினர்களின் பெயர்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்துப் பெயர் நீக்க விண்ணப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications